Politics

“இரண்டாம் நிலை குடிமக்களாக்கப்படும் இஸ்லாமியர்கள்!” : நாடாளுமன்றத்தில் அகிலேஷ் குற்றச்சாட்டு!

இந்திய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த நவம்பர் 25ஆம் நாள் தொடங்கி சுமார் மூன்று வாரங்களாக நடந்து வருகிறது.

எனினும், நாடாளுமன்றத்தில் சரியான விவாதமோ அல்லது ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளோ இடம்பெற்றுள்ளனவா? என்றால் இல்லை என்பதே விடையாக அமைந்துள்ளது.

காரணம், இந்தியா கூட்டணி கட்சிகளின் நிகராளிகள் விவாதம் வேண்டும் என முன்வைத்த மணிப்பூர் வன்முறை, அதானி ஊழல், ஃபெஞ்சல் புயல் நிவாரண ஒதுக்கீடு என எவற்றுக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு இணைந்து போக விரும்பவில்லை.

இதனால், எதிர்க்கட்சிகளின் இடையூறு தான் காரணம் என குற்றச்சாட்டு வைத்து, நாடாளுமன்ற இரு அவைகளையும் முழுமையாக ஒத்திவைத்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இந்நிலையில், இன்றைய (டிசம்பர் 13) நாடாளுமன்ற கூடலில் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75ஆவது ஆண்டு தொடங்கியதையொட்டி, அது குறித்த விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது பேசிய சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், “இந்திய அரசியலமைப்பு தான் இந்திய மக்களின் பாதுகாப்பு அரண். ஒடுக்கப்பட்டவர்களுக்கும், அடக்குமுறைக்கு ஆளானவர்களுக்கும் உரிமையை மீட்டுத்தரும் கருவியாக அரசியலமைப்பு அமைந்துள்ளது.

அவ்வாறு இருக்கக்கூடிய அரசியலமைப்பை சிதைக்கும் வேலைகளை தான் ஒன்றிய பா.ஜ.க அரசு முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, சுமார் 20 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் இந்தியாவில் இருக்கின்றனர். எனினும், அவர்களுக்கு எதிரான அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இஸ்லாமியர்களை இரண்டாம் நிலை குடிமக்களாக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்படுகின்றன. வீடுகள் தரைமட்டமாக்கப்படுகிறது. உடைமைகள் சூறையாடப்படுகிறது” என ஆளும் ஒன்றிய பா.ஜ.க அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

Also Read: ”பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை” : செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி!