Politics
பாஜகவுடன் கள்ளக்கூட்டணி : இஸ்லாமியர்களுக்கு அதிமுகவின் மற்றொரு துரோகம்... அம்பலப்படுத்திய அமைச்சர் நாசர்!
இஸ்லாமிய மக்களை அவதூறு செய்து பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியை பணிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தின் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் தீர்மானம் கொண்டுவந்தனர். இந்த தீர்மானத்துக்கு அதிமுக எம்.பிக்கள் கையெழுத்திட மறுத்துள்ளனர். இதனை குறிப்பிட்டு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா. மு. நாசர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், " இஸ்லாமிய மக்களை அவதூறு செய்து பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியை பணிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட மறுத்து, இஸ்லாமிய மக்களுக்கு மீண்டும் துரோகத்தை செய்துள்ளது அதிமுக. இதன் மூலம் பாஜகவுடன் கள்ளக்கூட்டணியை எடப்பாடி பழனிசாமி தொடர்வது அம்பலமாகி உள்ளது.
விஸ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கம் செய்யக்கோரும் தீர்மானத்தை எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்துள்ளனர். "வெறுப்பு பேச்சு", "வகுப்பு வேற்றுமையை தூண்டுதல்", "அரசியலமைப்பை மீறுதல்" என்ற 3 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய அந்த தீர்மானத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் நமது திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர்களான திரு. என்.ஆர்.இளங்கோ, திரு.கிரிராஜன், திரு.வில்சன், திரு.அப்துல்லா ஆகியோர் ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் அதிமுகவை சேர்ந்த நான்கு மாநிலங்களவை உறுப்பினர் இருந்தும் ஒருவர் கூட இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக நின்று அந்த தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திடவில்லை.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களின் உரிமைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் அவர்களுடன் தோளோடு தோள்நின்று ஆதரவாக செயல்பட்டு வரும் ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் தான். மதப்பிரிவினைவாதிகளுடன் என்றும் கைகோர்க்க மாட்டோம் என அன்றுமுதல் இன்றுவரை நெஞ்சுரத்தோடு களமாடி வருபவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
ஆனால் அடிமை அதிமுகவோ ஒருபக்கம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம் என கூறி மக்களை ஏமாற்றிக்கொண்டு மறுபக்கம் பாஜகவின் கள்ள உறவை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே CAA வை ஆதரித்து வாக்களித்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்ட அடிமை அதிமுக, தற்போதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது என்பது இப்போது உள்ளங்கை நெல்லிக்கனியாய் அம்பலமாகி உள்ளது.
"இஸ்லாமியர்கள் கனிவு, சகிப்புத்தன்மை இல்லாத ஆபத்தானவர்கள்" என்று பிளவுபடுத்தும் நோக்கம் கொண்ட சொற்களைப் பயன்படுத்தி பேசியிருந்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார்க்கு எதிராய் ஒரு கையெழுத்து போடக்கூட வக்கற்ற நிலையில் தான் அதிமுக உள்ளது. "இஸ்லாமியருக்கு பாதுகாவலாக இருப்பது அதிமுக மட்டுமே!?" என வாய்கிழிய பேசும் எடப்பாடி பழனிசாமியின் பொய் வேடம் கலைந்து போய் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது. இஸ்லாமிய மக்களது முதுகில் குத்துவதையே வாடிக்கையாக கொண்ட அடிமை அதிமுகவையும் அதன் தற்போதைய தளகர்த்தா பழனிச்சாமியின் துரோகத்தையும் இஸ்லாமிய மக்கள் என்றுமே மன்னிக்க மாட்டார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!