Politics

டங்ஸ்டன் சுரங்கத்திற்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்! : நாடாளுமன்றத்தில் திமுகவினர் கோரிக்கை!

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தின் பெருவாரியான பங்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கும், மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அபாயம் விளைவித்ததற்கும் ஆணி வேராய் அமைந்த ஸ்டெர்லைட் - வேதாந்தே நிறுவனமே உரிமை கொண்டுள்ளது.

இதுபோன்ற ஒரு பின்னணி கொண்ட ஒரு நிறுவனத்தை கொண்டு மேலும் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் வஞ்சிப்பதற்கான நடவடிக்கையை ஒன்றிய பா.ஜ.க எடுத்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசிற்கு அனுப்பப்பட்டது.

இதனையடுத்து இன்றைய (டிசம்பர் 11) நாடாளுமன்ற அவையில், “டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை உடனடியாக நீக்க வேண்டும்” என தி.மு.க சார்பில் முன்மொழியப்பட்டது.

தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, “மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைத்தால், கலாச்சார மற்றும் பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இச்சுரங்கத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கும் முன்பு, மாநில அரசிடம் ஆலோசிக்கவில்லை. எனவே கனிம சுரங்கத்திற்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தி.மு.க மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “தமிழ்நாடு சட்டப்பேரவையின் தீர்மானத்தை ஏற்று ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

Also Read: ‘முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம்’ - 180 பேர் பயன்! : அமைச்சர் கோவி. செழியன் பேச்சு!