Politics

நாடாளுமன்றத்தை திட்டமிட்டு முடக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கண்டனம்!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த நவம்பர் 25ஆம் நாள் தொடங்கி சுமார் இரு வாரங்களாக நடந்து வருகிறது.

எனினும், நாடாளுமன்றத்தில் சரியான விவாதமோ அல்லது ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளோ இடம்பெற்றுள்ளனவா? என்றால் இல்லை என்பதே விடையாக அமைந்துள்ளது.

காரணம், இந்தியா கூட்டணி கட்சிகளின் நிகராளிகள் விவாதம் வேண்டும் என முன்வைத்த மணிப்பூர் வன்முறை, அதானி ஊழல், ஃபெஞ்சல் புயல் நிவாரண ஒதுக்கீடு என எவற்றுக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு இணைந்து போக விரும்பவில்லை.

இதனால், எதிர்க்கட்சிகளின் இடையூறு தான் காரணம் என குற்றச்சாட்டு வைத்து, நாடாளுமன்ற இரு அவைகளையும் முழுமையாக ஒத்திவைத்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இந்தியாவின் நிகராளி என உலக அரங்கில் பிரதிபளித்துக்கொள்ளும் பிரதமர் மோடி, இந்தியாவின் சிக்கல்களில் பங்குகொள்ளாமல், ஜனநாயக உரிமையை ஆற்றாமல் நாடாளுமன்ற விவகாரங்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்.

குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள் ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உதவிகளை நாடிக்கொண்டிருந்த போதும், தமிழ்நாடு அரசு களத்தில் நின்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதும், பிரதமர் மோடி திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தது தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய நாடாளுமன்ற கூடலிலும், எவ்வித முரண்கள் ஏற்படாத சூழலிலும் அவை ஒத்திவைத்தது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இது குறித்து முதன்முறை நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி, “அதானி விவகாரத்தை முன்மொழிந்தாலே, ஒன்றிய பா.ஜ.க அரசு அச்சப்படுகிறது. நான் நாடாளுமன்றத்தில் புதிய உறுப்பினராக பதவியேற்றது முதல், இதுவரை பிரதமர் மோடியை அவையில் பார்க்கவில்லை. இதை ஏன் நாங்கள் சிக்கலாக எழுப்பக்கூடாது?” என கண்டனம் தெரிவித்தார்.

மாநிலங்களவை தி.மு.க குழுத் தலைவர் திருச்சி சிவா, “நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவது பா.ஜ.கவினர் தான். அவை நடவடிக்கையில் என்னென்ன இடம்பெற வேண்டும் என்பதை ஆளுங்கட்சியினரே முடிவு செய்கின்றனர்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எனினும், ஒன்றிய பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளில் மாற்றம் நிகழாது, அடக்குமுறையும், புறக்கணிப்பும் மேலோங்கி வருகிறது.

Also Read: “கொடூரம், விஷத்தன்மை...” - நீதிபதியின் பேச்சுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் - நடவடிக்கைக்கு கோரிக்கை!