Politics

“புயல் நிவாரண நிதியில் ஒன்றிய அரசு வழக்கம்போல தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்துவிட்டது!” : தொல். திருமாவளவன்!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வி.சி.க சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத் தொகையான 10 லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் முதலமைச்சர் உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என தெரிவித்தார். அண்மைக்காலமாக விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதார் அர்ஜுனா, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், கட்சியின் முன்னணி தலைவர்களுடன் ஆலோசனை செய்து ஆறு மாத காலம் அவரை இடைநீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, “தனியார் ஊடகம் நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் அரசியல் பேச வேண்டாம் என ஆதவ் அர்ஜுனாவிடம் தெரிவித்தும் அவர் பேசியதால், கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக திமுக தரப்பிலிருந்து எந்த அழுத்தமும் இல்லை” என்றும் திட்டவட்டமாக கூறினார்.

மேலும், “பெஞ்சல் புயல் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கியது. தமிழ்நாடு அரசு 2,475 கோடி நிவாரணம் கோரி ஒன்றிய அரசுக்கு மனு அளித்தது. ஆனால், வெறும் 944 கோடி மட்டுமே ஒன்றிய அரசு வழங்கி வழக்கம் போல தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்துள்ளது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also Read: ”சட்டமன்ற நாயகர்- கலைஞர்” : நூற்றாண்டு விழா சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!