Politics

நாடாளுமன்ற கூட்டத்தொடர் : “பிரதமர் மோடி அவைக்கே வருவதில்லை” - திருச்சி சிவா எம்.பி. குற்றச்சாட்டு !

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் நாளான நேற்று, அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது தினக்கொண்டாட்டம் அனுசரிக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.

அப்போது குடியரசுத்தலைவரின் உரையில், "சோசலிஸ்ட்" மற்றும் "மதச்சார்பற்ற" என்ற சொற்கள் உட்பட அரசியலமைப்பின் சில முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்படவில்லை. இந்த விவகாரம் பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியது. ஏற்கனவே இந்த கூட்டத்தொடரில் மக்களுக்கு விரோதமான வக்ப் வாரியம் திருத்தச்சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்டவைக்கான சட்டமசோதாவை நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு துடிக்கிறது.

அதோடு அதானி முறைகேடு குறித்தும் விவாதம் நடத்த பாஜக அரசு மறுத்து வருகிறது. மேலும் வழக்கம்போல் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி-க்கள் பேசிக்கொண்டிருக்கும்போது மைக் அணைக்கப்படுகிறது. சபாநாயகர் ஓம் பிர்லாவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையிலும், தனது புத்தியை ஒன்றிய பாஜக அரசு வெளிப்படுத்தி வருகிறது.

இந்த சூழலில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தின் உள்ளே அவைக்கு வருவதே இல்லை என்று திருச்சி சிவா எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி பேசியது வருமாறு :

”பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருகிறார். அங்கு இருக்கும் அவரது அலுவலகத்திற்கு செல்கிறார். ஆனால் நாடாளுமன்றத்தின் உள்ளே அவைக்கு வருவதும் இல்லை; விவாதத்திற்கு தயாராகவும் இல்லை. யாராவது கேள்வி கேட்டால் எழுந்து பதில் சொல்லும் பொறுப்பை தட்டிக்கழிக்கிறார். அந்த பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை என்றால் இவர்கள் விவாதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள். When power increases, responsibility increases என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

மணிப்பூர் கலவரம், அதானி மேல் அமெரிக்காவின் குற்றச்சாட்டு, உத்திரபிரதேசத்தில் சம்பல் பகுதியில் தொடரும் இரு பிரிவினருக்கிடையிலான சண்டை என நாங்கள் எந்த விவாதத்தை தொடங்கினாலும், அதை பேச அவைத்தலைவர் அனுமதி மறுத்து அவையை ஒத்தி வைக்கிறார். அதானி விசயத்தில் பதில் சொல்ல வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது.” என்றார்.

Also Read: மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிப்பு... இனி Online-ல் இரயில்வே அடையாள அட்டைகள் - எப்படி பெற்றுக்கொள்ளலாம்?