Politics

மீண்டும் மோடி Washing machine : பாஜக கூட்டணியில் சேர்ந்ததும் முடித்துவைக்கப்பட்ட மோசடி வழக்கு !

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி ஆட்சி செய்துகொண்டிருந்த நேரத்தில், கடந்த 2022-ம் ஆண்டு கட்சி பிளவு பட்டது. ஏக்நாத் ஷிண்டே அக்கட்சியில் இருந்து விலகி, அவருடன் அதிக எம்.எல்.ஏ-க்களும் விலகியதால் ஆட்சி கவிழ்ந்தது. அந்த நேரத்தில் ஷிண்டேவுக்கு ஆதரவு அளித்தவர்களில் பலரையும் பாஜக அரசு ஏவி அமலாக்கத்துறையால் மிரட்டப்பட்டு கட்சி மாற்றப்பட்டதாக பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த சூழலில் உத்தவ் அரசில் எம்.எல்.ஏ-வாக இருந்த ரவீந்திர வாய்க்கர், மேற்கு மும்பை ஜோகேஸ்வரியில், 5 ஸ்டார் ஹோட்டல் கட்டுவதற்கு மும்பை மாநகராட்சி குறைந்த விலையில் நிலம் வழங்கி, கட்டடம் கட்ட ஒப்புதலும் வழங்கியிருந்தது. ஆனால் 2022-ம் ஆண்டு கட்சி இரண்டாக பிரிந்து ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சியை பிடித்தது.

அந்த சமயத்தில் ரவீந்திர வாய்க்கருக்கு ஹோட்டல் கட்ட கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. மேலும் அவர் மீது ரூ.500 கோடி நிலமோசடி புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக ரவீந்திர வாய்க்கருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.

மேலும் ரவீந்திர வாய்கர் மட்டுமின்றி அவரது மனைவி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு தொடர்ந்து அவருக்கு இன்னல்கள் கொடுத்து வந்தது. இந்த சூழலில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் சமயத்தில் திடீரென்று ரவீந்திர வாய்க்கர், உத்தவ் பிரிவில் இருந்து ஷிண்டே பிரிவு சேனா கட்சிக்கு மாறினார். அப்போது அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்பட்டது. அதன்படி மும்பை வட மேற்கு தொகுதியில் போட்டியிட்ட வாய்க்கர், வெறும் 48 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியை தொடர்ந்து இவர் EVM ஹேக் செய்து வெற்றி பெற்றதாக பிரபல செய்தி நிறுவனம் செய்தியும் வெளியிட்டிருந்தது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த சூழலில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து தற்போது 1 மாத காலமாகியுள்ள நிலையில், வாய்க்கர் மீதான நில மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முடித்து வைத்துள்ளனர்.

இதனை போலீஸார் நீதிமன்றத்தில் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையில் இது ஒரு போலியான குற்றச்சாட்டு என்றும், அவர் மீது எந்த தவறு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் பாஜக ஆதரவு கட்சியில் இணைந்து எம்.பியான பிறகு, தற்போது வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது பலர் மத்தியிலும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

ஏற்கனவே பாலியல், பண மோசடி என பல குற்றச்சாட்டுகள் இருக்கும் நபர், பாஜகவில் இணைந்தால், அவர் பாஜக வாஷிங் மெஷினால் சுத்தம் செய்யப்பட்டு, மீதுள்ள வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விடுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தற்போது அந்த பட்டியலில் வாய்க்கரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.