Politics
மீண்டும் முதல்வரான ஹேமந்த் சோரம் : பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் !
பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநரை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. அதுமட்டும் போதாது என்று ஆளுங்கட்சியினரை குறித்து வைத்து அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்டவைகளை ஏவி அனைவருக்கும் தொல்லை கொடுத்து வருகிறது.
அந்த வகையில் நில மோசடி, சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வழக்குகளில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. ஆரம்பத்தில் சம்மனை புறக்கணித்து வந்த அவர், பின்னர் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி நேரில் ஆஜரானபோது, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு, ஹேமந்த் சோரன் முதலமைச்சராக இருந்த நேரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஹேமந்த் சோரன் கைதுக்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் எழுந்தது. அவ்வளவு அவசரமாக அவர் கைது செய்யப்படுவது எதனால் என்ற கேள்வியும் எழுந்தது.
இதனிடையே பாஜகவின் சூழ்ச்சியை அறிந்த ஹேமந்த் சோரன், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அமைச்சராக இருந்த சம்பாய் சோரனை முதலமைச்சராக அறிவித்தார். இதையடுத்து பெரும்பான்மையை நிரூபித்து ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்றுக்கொண்டார்.
இதனிடையே சிறையில் இருந்த ஹேமந்த் சோரன், ஜாமீன் கேட்டு பலமுறை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டபோதும், ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவரது உறவினர் இறப்பின் இறுதிச்சடங்கில் பங்கேற்க 3 நாள் ஜாமீன் கேட்ட நிலையில், ஒரே ஒரு நாள் மட்டுமே (மே 6) ஜாமீன் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மீண்டும் ஜாமீன் கேட்டு முறையீடு செய்தார். இந்த வழக்கு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 28-ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாஜக அரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர்.
மேலும் 150 நாட்கள் (5 மாதங்கள்) கழித்து வெளியே வந்த ஹேமந்த் சோரனுக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். இந்த சூழலில் தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கும் ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். அதன்படி ஜார்கண்டின் தற்போதைய முதல்வராக இருக்கும் சம்பய் சோரன் நேற்று (ஜூலை 03) அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து, ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து ஹேமந்த் சோரனை பதவியேற்ற ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். அதன்படி ஆளுநரை சந்தித்த ஹேமந்த் சோரன் அங்கு நடைபெற்ற விழாவில் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் .
Also Read
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
செமி கண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க 5 ஆண்டு திட்டம்! : முழு முனைப்பில் தமிழ்நாடு அரசு!