Politics
நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு : குரல் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதாக அறிவிப்பு !
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில், இதில் கூட்டணி கட்சிகளின் உதவியோடு பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழலில் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
புதிய அரசின் முதல் கூட்டத்தொடரின்போது தற்காலிக சபாநாயகர் பதவி எப்போதும் நாடாளுமன்றத்தின் மூத்த எம்.பி.க்கு வழங்கப்படுவது மரபு. அந்த வகையில் காங்கிரஸை சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ் 8-வது முறையாக எம்.பி-யாக இருக்கும் நிலையில், அவரை விட நாடாளுமன்றத்தில் இளையவரான பாஜகவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் என்பவரை பாஜக அரசு தற்காலிக சபாநாயகராக நியமித்தது.
இதற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தெடர்ந்து தற்காலிக துணை சபாநாயகர் பதவி இந்தியா கூட்டணி கட்சி எம்.பிகளுக்கு வழங்க பாஜக அரசு முன்வந்த நிலையில், அதற்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மறுப்பு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கினால் சபாநாயகர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவித்தன. ஆனால், அதற்கு பாஜக உடன்படாத நிலையில், சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு செய்தன.
அதன்படி இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட நிலையில், பாஜக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதனால் 48 ஆண்டுகளில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற்றது.
இதில் குரல் வாக்கெடுப்பு மூலமாக பாஜக வேட்பாளர் ஓம் பிர்லா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சபாநாயகர் தேர்தலில் வெற்றிபெற்ற ஓம் பிர்லாவை பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக அழைத்துச்சென்று சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர்.
Also Read
-
தருமபுரி - ரூ.39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!