Politics

தமிழ்நாடு குறித்து அவதூறு பரப்பி கைது செய்யப்பட்ட Youtuber பாஜகவில் இணைந்தார்... யார் இந்த RSS மணீஷ் ?

தமிழ்நாட்டில் இருக்கும் பீஹாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளிகள் தாக்கப்படுவதாக கடந்த 2023-ம் வதந்தி செய்தி நாடு முழுவதும் பரவி வந்தது. இதனை பாஜகவினர் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பி தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த கடும் முயற்சி செய்தது. புலம்பெயர் தொழிலாளிகள் தாக்கப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்டதாகவும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

இதையடுத்து இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டதில், இதில் ஒரு சிலவை போலி வீடியோ என்றும், மற்றவை வேறு மாநிலங்களில் நிகழ்ந்த சம்பவம் என்றும் கண்டறியப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாட்டில் பீகாரை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

அந்த ஆய்வின்போது, இந்த தகவல் அனைத்தும் போலி என்றும், வட மாநில தொழிலாளிகள் அனைவரும் இங்கு பாதுகாப்புடன் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது தமிழ்நாடு, பீகார் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து உ.பி-ஐ சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் மீதும் தமிழ்நாடு போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இந்த தகவல் அனைத்தும் பொய் என்று தெரிந்த பின்னரும் கூட, தொடர்ந்து வதந்தி பரப்பி வந்த RSS பிரமுகரான பீகார் மாநில யூடியூபர் மணீஷ் கேஷ்யாப் மீது நீலாங்கரை போலிஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த போலி செய்தியை பரப்பி அமைதியை சீர்குலைக்க முயன்ற மணீஷ் கேஷ்யாப்புக்கு நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது.

இந்த நிலையில் தற்போது மணீஷ் கேஷ்யாப் பாஜகவில் இணைந்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக பொய் வீடியோக்களை வெளியிட்டு கைதான மணீஷ் காஷ்யப் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக எம்.பி மனோஜ் திவாரி முன்னிலையில் இன்று மணீஷ் கேஷ்யாப் பாஜகவில் இணைந்துள்ளார்.

மணீஷ் கேஷ்யாப் மீது தமிழ்நாடு, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 19 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பாஜகவில் இவர் இணைந்துள்ள சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே பல்வேறு குற்றவாளிகளை பாஜக தங்கள் கட்சியில் இணைத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது அதனை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் மணீஷ் கேஷ்யாப்பும் இணைந்துள்ளார்.

Also Read: ”பிரிவினை தூண்டும் மோடி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும்” : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!