Politics

மதப்பிரிவினையை விதைக்கும் மோடி அரசு : எதிர்க்கட்சிகள் கண்டனம்!

நாடு முழுவதும் சர்வாதிகாரம் நிலைக்க, ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையில், தனது பிரச்சார பேச்சுகளை அமைத்து வருகிறார் மோடி.

அவ்வகையில் தமிழ்நாடு வந்தால், சமூக நீதி, வளர்ச்சி, அ.தி.மு.க முன்னாள் தலைவர்களை முன்னிறுத்தி பேசுதல் ஆகிய கூறுகளை முன்னிறுத்தியும்,

வட மாநிலங்களுக்கு சென்றால் மதப்பிரிவினை, ராமர் கோவில் என தெற்கிற்கு முற்றிலும் எதிரான பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறார் மோடி.

அதற்கு அவரது கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் கூட விலக்கில்லை. கர்நாடகத்தின் தெற்கு பெங்களூர் தொகுதியில் மக்களவை வேட்பாளராக போட்டியிடும் தேஜசுவி சூர்யா, “தமிழ்நாட்டில் ‘பெரியாரிசம்’ ஒழிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதற்கு, சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும், மூட நம்பிக்கையை ஒழிப்பதற்கும், பெண்ணுரிமையை முன்னெடுப்பதற்கும் பாடுபட்ட தலைமையின் கருத்தியலை ஒழிக்கத் துடிக்கும், ஒரு வேட்பாளர் எவ்வாறு ஜனநாயக கடமையாற்றுபவராக இருக்க இயலும் என்ற கேள்வியுடன், “அது சரி! தலை (மோடி) எப்படியோ, அப்படி தானே வாலும்!” என்று சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றைய நாள் (21.04.24) ராஜஸ்தானில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்திய சொத்துகள் அனைத்தும், அதிக அளவிலான குழந்தைகளை உடைய இஸ்லாமியர்கள் கைவசம் போகும்” என வெறுக்கத்தக்க வகையில், மத பிரிவினையை வளர்க்கிற வகையில் பேசியுள்ளார்.

மதச்சார்பற்ற ஒரு நாட்டின் பிரதமர் உரையில், பிளவுவாதம் ஓங்கி காணப்படுவது வருத்தமளிக்கிறது என அரசியல் கட்சி தலைவர்களும், கட்சி சாராதவர்களும் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவ்வகையில், மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல், “ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் மத பிரிவினை பேச்சு புதிதல்ல. ஏற்கனவே தெரிந்தது தான். ஆனால், இத்தகைய பிரதமரைக் கொண்ட என் நாட்டை நினைத்துதான் வருந்துகிறேன்” என்றும்,

காங்கிரஸ் மக்களவை வேட்பாளர் சி. பி. ஜோஷி, “காங்கிரஸ் ஆட்சியில் கூட சோம்நாத் கோவில் கட்டப்பட்டது. ஆனால், அது ஒரு போதும் தேர்தல் பரப்புரையில் இடம்பெறவில்லை. ஒரு ஜனநாயகத்தில், நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லும் திட்டங்களே தேர்தல் பரப்புரையாக அமைதல் வேண்டும்” என்றும்,

சமாஜ்வாதி மூத்த தலைவர் சலீம் ஷெர்வானி, “மதச்சார்பற்ற ஒரு நாட்டில், ஒரு இஸ்லாமியராக நான் பாதுகாப்பாக உணர்கிறேன் என்றால், அதற்கு இந்துக்களே காரணம். ஆனால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் இந்து - இஸ்லாமியர்களிடையே பிரிவினையை உண்டாக்கி வருகிறது” என்றும் தெரிவித்தனர்.

இவ்வாறான விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையிலும், அதற்கு பா.ஜ.க.வினர், நாட்டின் வளர்ச்சி குறித்து தான், பிரதமர் மோடி பேசினார் என வசைபாடி வருகிற நிலை, கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

Also Read: இணையத்தில் டிரெண்டாகும் #ModiDisasterForIndia : பா.ஜ.கவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!