Politics

10 ஆண்டுகள் பிரதமர், 13 ஆண்டுகள் குஜராத்தின் முதல்வர் : வறுமையை திரையிட்டு மறைக்கும் நிலையில் குஜராத் !

இந்தியாவின் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பிரதமர் மோடி, பொய் நம்பிக்கை ஊட்டுவதில் வல்லவர். அவர் சொல்லுவதற்கும், நடைமுறைக்கும் உள்ள வேறுபாடுகள் ஏராளம். வேளாண்மை, கல்வி, பாதுகாப்பு, நிதி என அனைத்து துறைகளும் மக்களுக்கு விரோதம் விளைக்கும் செயல்களை செய்வதிலேயெ நாட்டம் கொண்டுள்ளன. நன்மை பயக்கும் செயல்கள் என்றால் ஓடி மறைகின்றன.

இதற்கு சிறந்த உதாரணம், பா.ஜ.க.வின் கோட்டை எனப்படுகிற குஜராத் மாநிலத்தின் வணிக நகரில் கூட ஏழைகளின் வாழ்வாதாரம் நசுக்கப்படுவது என்பது தான். பா.ஜ.க.வினரை பொறுத்தவரை வறுமையை நீக்குவது குறிக்கோள் அல்ல. வறுமையை மறைப்பதே குறிக்கோள் என்பதனை அம்மாநில மக்களே தெளிவுபட தெரிவித்துள்ளனர்.

அண்மையில், தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையடுத்து, குஜராத்திலும் முதலீட்டாளர்கள் மாநாடு முன்னெடுக்கப்பட்டது. அப்போது உலக நாடுகளிலிருந்தும், தேசிய அளவிலும் தொழில்முனைவோர் பலர் அகமதாபாத் நகரை பார்வையிட முனைந்துள்ளனர்.

அவ்வேளையில், உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் பகுதியை யாரும் காண இயலாதவாறு பிளாஸ்டிக் உரைகள் கொண்டு மூடியுள்ளது பா.ஜ.க அரசு. பின்பு, தொழில்முனைவோர்கள் மாநிலத்தை விட்டு சென்றதும் பிளாஸ்டிக் உரைகளை நீக்கியுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள், “முக்கிய பிரமுகர்கள் எங்கள் வறுமை நிறைந்த பகுதியை கடக்கும் வேளையில், எங்களின் வறுமையை மூடி மறைக்கிறார்களே தவிர, வறுமையை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை.”

“தூய்மை இந்தியா என்று பா.ஜ.க.வினர் நாடு முழுக்க முழக்கம் எழுப்புகின்றனர். ஆனால், ஒவ்வொரு நாளும் ஒரு வாளி சாக்கடை அள்ளினால் தான், வாழவே முடியும் என்ற நிலை உள்ளது” என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது போலவே, டெல்லி மாநகரின் G20 மாநாட்டின் போதும் ஒன்றிய அரசு, வறுமை நிறைந்த பகுதிகளை பச்சை துணி கொண்டு மூடியது.

இதன்வழி, வறுமையை மறைப்பது பா.ஜ.க.விற்கு புதிதல்ல, வறுமையை திரையிட்டு மறைப்பதுதான் புதிது என்பது வெளிப்படுகிறது. இவ்வாறான சூழல் நிலவும் வேளையில் தான், 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர், 2 கோடி வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன என பா.ஜ.க பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.