Politics

"மக்களை மதரீதியாக பிளவுபடுத்த வேண்டுமென்ற நோக்கம் அண்ணாமலைக்கு இருந்துள்ளது" - உயர்நீதிமன்றம் காட்டம் !

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் "பேசு தமிழா பேசு" என்ற யூடியூப் சேனலுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். அதில் இரு மதங்களுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையிலும், கிறிஸ்தவ மிஷனரிகள் குறித்தும் அவதூறாகப் பேசியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் மனுஷ், அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான தகவலை பரப்பும் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும எனக் கோரி புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்ட நிலையில், இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அண்ணாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, " இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய வெடிகுண்டை (ticking bomb) போன்றது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை சட்டத்தை பற்றி தெரிந்திருப்பார்.

அவர் பேசியதில் இருந்து சமுதாயத்தை பிளவுபடுத்த வேண்டுமென்ற உள்நோக்கம் அண்ணாமலைக்கு இருந்துள்ளது என்பதற்கு முகாந்திரம் உள்ளது. சுற்றுச்சூழல் நலனுக்காக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திடீரென மத ரீதியிலான பதட்டத்தை எடுத்து செல்லும் வாகனமாக மாற்றப்பட்டுள்ளதுவன்முறை, பொது அமைதிக்கு குந்தகம் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற அண்ணாமலை தரப்பு வாதத்தை ஏற்க முடியாது" என்று கருத்து தெரிவித்த நீதிபதி அண்ணாமலை மனுவை தள்ளுபடி செய்தார்.

Also Read: ”மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!