Politics

"மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும்" - EWS இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு !

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் முறை அரசியலமைப்பில் இல்லை என்றும், இது சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கை என்றும் தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இதையடுத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதை நடைமுறைப் படுத்தக் கூடாது என வலியுறுத்தி தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தன.

இந்த வழக்கில், இந்த சட்டத்துக்கு ஆதரவாக நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பர்திவாலா, பெல்லா திரிவேதி ஆகிய 3 பேர் ஆதரவாகவும், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகிய இருவர் எதிராகவும் தீர்ப்பளித்தனர். இதனால் இந்த சட்டம் அமலுக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் இடஒதுக்கீட்டில் இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட நிலையில், பல்வேறு மாநில அரசுகளும் இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்தின. எனினும் தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இந்த 10 % இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாமல் இருந்தது.

இதன் காரணமாக அந்த மாநிலங்களிலும் 10 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, "10 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டுமா என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இதில் நீதிமன்றம் தலையிட முடியுமா என்கிற பிரச்சனை இருக்கிறது என்று தெரிவித்தனர்." பின்னர் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.

Also Read: “அமைச்சர் PTR கொடுத்த விளக்கத்தை பாருங்கள்” - இந்தி திணிப்பு குறித்த கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலடி!