Politics
எம்.பி-க்கள் சஸ்பெண்ட் : குடியரசுத் தலைவர் எப்போது வேதனையை வெளிப்படுத்துவார் ? - தீக்கதிர் தலையங்கம் !
இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடியான நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் குறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு நாடாளுமன்ற சபாநாயர்கள் மறுத்துவிட்டனர்.
அதோடு நிறுத்தாத அவர்கள் அது குறித்து தொடர்ந்து கோரிக்கை எழுப்பிவந்த 141 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். அதன் பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,யான கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை சபாநாயகரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கரைப் போல நடித்துக் காட்டினார், அதனைத் தொடர்ந்து இதனை பார்த்து பார்த்து மனம் நொந்து போனேன் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில், இது குறித்து தீக்கதிர் நாளிதழ் தலையங்கள் வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு :
நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கரைப் போல நடித்துக் காட்டிய விதத்தைப் பார்த்து மனம் நொந்து போனேன் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தல வர் போன்ற பதவிகள் கண்ணியத்துக்குரியவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மாநிலங்களவை தலைவரான குடியரசு துணைத் தலைவரைப் போல திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,யான கல்யாண் பானர்ஜி மிமிக்ரி செய்தது ஏற்கத்தக்கதல்ல, கண்டிக் கத்தக்கது. இதுகுறித்து குடியரசுத் தலைவரின் வேதனை நியாயமானது.
ஆனால் அதே நேரத்தில் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்து புகைகுப்பிகளை வீசியது தொடர்பாக பிரதமரும், ஒன்றிய உள்துறை அமைச்சரும் அவையில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று போராடியதற்காக இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு 141 எம்.பி.,க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனரே இது நியாயம் தானா? இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஏற்புடையதுதானா?
நாடாளுமன்ற புதிய கட்டிடத் திறப்பு விழா விற்கு நாடாளுமன்றத்தின் தலைவர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் அழைக்கப்படவில்லை. பிரதமர் மோடியே கட்டிடத்தை திறந்து வைத்தார். நாடாளுமன்ற கட்டிடத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத ஆதீன கர்த்தர்கள் அழைக்கப்பட்டார்கள். இது நியாயம்தானா?
புதிய கட்டிடத்தில் நடந்த முதல் கூட்டத்திற்கும் குடியரசுத் தலைவர் அழைக்கப்படவில்லை. இந்த கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. நாட்டின் முதல் குடிமகள் அப்போதும் கூட அழைக்கப்படவில்லை. இது குறித்து குடியரசுத் தலைவர் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியது உண்டா?
இதே குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தன்னுடைய உயரிய பதவியின் மாண்பை மறந்து மாநிலங்களவையில் பாஜககாரரைப் போலவே பலமுறை பேசியுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுரிமையை மறுத்திருக்கிறார். திமுக எம்.பி., அப்துல்லா காஷ்மீர் குறித்த விவாதத்தில் பெரியாரின் பெயரை சொன்னதற்காக அந்தக் கருத்தை மட்டுமன்றி பெரியார் என்ற பெயரையே நீக்கினார். இதுவெல்லாம் நியாயம் தானா?
நாடாளுமன்றத்தை பாஜகவின் பொதுக்குழு கூட்டம் போல மாற்றும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூண்டோடு இடைநீக்கம் செய்யப்படுவது ஜனநாயகத்திற்கு இழுக்காகும். நாடாளுமன்றத்தின் தலைவர் என்ற முறையில் இதுகுறித்தும் குடியரசுத் தலைவர் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்துவார் என நாடு எதிர் பார்க்கிறது.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!