Politics

தகவல் அறியும் உரிமை சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் மோடி அரசு -காங்கிரஸ் விமர்சனம் !

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய சட்டங்களில் ஒன்று தகவல் அறியும் உரிமை சட்டம் . இந்த சட்டம் கொண்டுவந்த பின்னர் ஏராளமான முறைகேடுகளும், ஊழல்களும் வெளிவந்தன. மேலும், மக்கள் தங்கள் சந்தேகங்களை அறிந்துகொள்வதற்கு இந்த சட்டம் முக்கிய பங்காற்றியது.

ஆனால், பாஜக அரசு வந்ததும், அந்த அரசின் பல்வேறு முறைகேடுகள் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளியாகின. இதன் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு அந்த சட்டதிட்டத்தை நீர்த்துப்போகச்செய்ய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பாஜக அரசின் இந்த மசோதாவை பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்திருந்தன. எனினும் பாஜக அரசு இந்த சட்டதிருத்தத்தை நிறைவேற்றியது. இந்தத் திருத்தத்தில், அலுவலகத்தின் பதவிக்காலம் மற்றும் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பிற விதிமுறைகள் மற்றும் சேவை நிபந்தனைகள் போன்றவை மாற்றம் செய்யப்பட்டன.

இந்த நிலையில், தகவல் அறியும் உரிமை சட்ட விதிகளை நீர்த்துப்போகச்செய்ய மோடி அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது குறித்து தனது X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தகவல் அறியும் உரிமை சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகிறது. அந்தச் சட்டம் குறைந்தபட்சம் 2014-ம் ஆண்டு வரை ஒரு மாற்றமாக இருந்தது. அதன் பிறகு மோடி அரசு அந்தச் சட்டத்தினை பலவீனப்படுத்தவும், அதன் விதிகளை நீர்த்துப்போகச்செய்யவும், மோடி துதிபாடிகளை அதன் ஆணையர்களாக நியமித்து கோரிக்கைகளை நிராகரிக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.

தகவல் அறியும் சட்டத்தின் சில வெளிப்பாடுகள் பிரதமர் மோடிக்கு சங்கடமாக இருந்தது அதன் முதல் திருத்தத்துக்கு வழிவகுத்தது. இந்த திருத்தத்தின் சில விஷயங்களை எதிர்த்து நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். தகவல் அறியும் உரிமை சட்டம் விரைவாக சமாதிநிலைக்கு தள்ளப்பட்டு வரும் நிலையில், விரைவில் அந்த வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

Also Read: வாரி வழங்கியும் ஒரு பதக்கம் கூட வெல்லாத குஜராத்: ஆசிய விளையாட்டு போட்டிகளில் பரிதாபம்- முழு விவரம் என்ன?