Politics

”அட்டூழியம் மற்றும் ஊழல்களின் ஆய்வகம் மத்திய பிரதேசம்” : பாஜக அரசை கடுமையாக சாடிய ராகுல் காந்தி MP!

தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஆட்சி நிறைவடையவுள்ளது. இதனால் இம்மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, நேற்று 5 மாநிலத்திற்கான தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மிசோரம் - நவம்பர் 7, மத்திய பிரதேசம் - நவம்பர் 17, தெலங்கானா - நவம்பர் 30, ராஜஸ்தான் - நவம்பர் 23, சத்தீஸ்கர் - முதற்கட்ட வாக்குப்பதிவு : நவம்பர் 07 ம் தேதி , இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு : நவம்பர் 17 ம் தேதி. இந்த 5 மாநிலங்களுக்கு டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 5 மாநிலங்களிலும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடத் தயாராகி வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலை சந்திக்க இந்தியா கூட்டணியும் வியூகம் வகுத்து வருகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசம் ஷாடோல் நகரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "இந்திய நாட்டின் எக்ஸ்ரேவாக சாதிவாரி கணக்கெடுப்பு இருக்கும். ஒ.பி.சிக்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் நிலையை இது வெளிச்சம் போட்டுக் காட்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்தக் காங்கிரஸ் கட்சி பா.ஜ.கவிற்கு அழுத்தம் கொடுக்கும். அப்படியும் பா.ஜ.க அதைச் செய்யவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த உடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

பா.ஜ.கவுக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் உண்மையான பரிசோதனை கூடம் குஜராத் அல்ல. மத்திய பிரதேசம்தான் என ஒரு புத்தகத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி குறிப்பிட்டிருந்தார். அப்படி இறந்தவர்களின் மருத்துவச் சிகிச்சையில் ஊழல் நடந்துள்ளது. பழங்குடியினர், பெண்கள், சிறுபான்மையினருக்கு எதிரான ஆய்வகமாக மத்திய பிரதேசம் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: வெவ்வேறு தேதிகளில் வாக்குப்பதிவு.. ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை: 5 மாநில சட்டமன்ற தேர்தலின் முழு விவரம்!