Politics

புறக்கணிக்கப்பட்ட முர்மு.. பட ப்ரோமோஷனுக்காக நடிகைகளுக்கு நாடாளுமன்றத்தை சுற்றி காட்டிய ஒன்றிய அமைச்சர் ?

இந்தியாவில் பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நாடாளுமன்றம் பழமையாக உள்ளது என கூறி புதிய நாடாளுமன்றத்திற்கு 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போதே புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்த நேரம் எண்பதால் மக்கள் பணத்தை புதிய நாடாளுமன்றம் கட்டி வீணடிக்க வேண்டாம் என அனைத்து எதிர்கட்சிகளும் வலியுறுத்தின.

ஆனால் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி சாவர்க்கர் பிறந்த நாளான கடந்த மே 28ம் தேதி திறந்து வைத்தார். அதற்கு முன்னரே புதிய நாடாளுமன்ற கட்டடத்தை இந்தியாவின் முதல் குடிமகனாக குடியரசுத்தலைவரை கொண்டு திறக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் குடியரசுத்தலைவருக்கு அழைப்பே விடுக்கப்படாமல் மோடியால் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டது. புதிய கட்டடம் திறக்கப்பட்ட போதிலும், அங்கே நாடாளுமன்ற கூட்ட தொடர் நடைபெறாமல் இருந்தது.

இந்த சூழலில் கடந்த 18-ம் தேதி சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத் தொடரின் முதல் நாள் பழைய நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதன்பிறகு நேற்று முதல் புதிய நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2-ம் நாள் (நேற்று) நடைபெற்ற கூட்டத்தொடரில் மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த மசோதாவுக்கு பலரும் வரவேற்பளித்தனர். எனினும் புதிய நாடாளுமன்றத்திற்கு இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அழைக்கப்படாதது மக்கள் மத்தியில் விமர்சனங்களை எழுப்பியது. அதுமட்டுமின்றி நேற்று புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாளே, அதனை சுற்றி பார்க்க நடிகைகள் கங்கனா, ஈஷா குப்தா, சப்னா செளத்ரி உள்ளிட்ட சிலர் வருகை தந்தனர்.

அவர்களுக்கு ஒரு வழிகாட்டி போல் ஒன்றிய அமைச்சர் புதிய நாடாளுமன்றத்தை சுற்றி காட்டினார். நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், அதனை சற்றும் கண்டுகொள்ளாமல் இன்று மீண்டும் பாலிவுட் நடிகைகளை வரவழைத்து கட்டடத்தை சுற்றிக்காட்டியுள்ளார் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர்.

பாலிவுட் இயக்குநர் கரண் பூலானி இயக்கத்தில் உருவாக்கம் 'Thank You for Coming' என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்த படத்திற்கு ப்ரோமோடிஷன் செய்யும் விதமாக இன்று இந்த படத்தில் நடித்த முக்கிய நடிகைகளான பூமி பெட்னேகர் (Bhumi Pednekar), ஷெஹ்னாஸ் கில் (Shehnaaz Gill), டோலி சிங் (Dolly Singh), ஷிபானி பேடி (Shibani Bedi) உள்ளிட்டோர் புதிய நாடாளுமன்றத்துக்கு வருகை புரிந்தனர்.

அவர்களுக்கும் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் ஒரு வழிகாட்டிபோல் ஒவ்வொரு விஷயங்களை பற்றி எடுத்துக்கூறி சுற்றி காட்டி வந்துள்ளார். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை வலுத்து வருகிறது.

புதிய நாடாளுமன்றத்தின் திறப்புக்கும், நேற்று நடைபெற்ற கூட்டத்தொடருக்கும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அழைப்படாத நிலையில், இப்படி நடிகைகளை வரவழைத்து ஒன்றிய அரசு சுற்றி காட்டி வருகிறது. இந்த நிகழ்வுக்கு மக்கள் மத்தியிலும், இணையவாசிகள் மத்தியிலும், எதிர்க்கட்சிகளும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை ரகசியமாக தாக்கல் செய்தது ஏன்?: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய கனிமொழி MP