Politics

“பக்தி போதையில் பகுத்தறிவை இழக்காதீர்.. உயர்நீதிமன்ற கேள்விக்கு என்ன பதில்?” - கி.வீரமணி அறிக்கை !

பிள்ளையார் ஊர்வலம் போகச் சொன்னாரா? என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கேட்ட கேள்விக்கு என்ன பதில்? தமிழ் மண்ணில் காலூன்ற முடியாத மதவாத சக்திகள் இந்தப் பிள்ளையாரைக் கையில் எடுத்துள்ளன - சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன - பக்திப் போதையில் பகுத்தறிவை இழக்காதீர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

முன்பெல்லாம் சுமார் 50 ஆண்டுகளுக்குமுன்பு - ‘பிள்ளையார் சதுர்த்தி’ என்ற பெயரில், பல ஊர்களில் களிமண்ணைக் குவித்து சிறிய அளவில் பிள்ளையார் பொம்மைகளைச் செய்து - அதை விற்று (2, 3 ரூபாய்தான்) தேவைப்படுவோர் வாங்கி இரண்டொரு நாள் வீட்டிற்குள் வைத்து, பூஜை செய்து, கொழுக்கட்டை செய்தும், பிள்ளையார் காகிதக் குடை செய்து வைத்தும், பிரம்பப் பழம் வைத்துப் படைத்தும், அதை பக்தி என்ற அளவில் கும்பிட்டு, பூஜை செய்து, 2 நாள் கழித்து வீட்டில் உள்ள கிணற்றிலோ, அருகில் உள்ள ஆறு, குளங்களிலோ அதைப் போட்டு கரைத்து விடுவார்கள்.

பிள்ளையார் தமிழ்நாட்டில் வந்தது எப்படி? :

கடவுள்களில் இந்தப் பிள்ளையார் வரவு என்பதேகூட கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கிடையாது. வாதாபி படையெடுப்புக்குப் பின்னரே, பரஞ்சோதி என்ற தளகர்த்தன் வடக்கே இருந்து கொண்டு வந்து இங்கே புகுத்திய ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு என்று பன்மொழிப் புலவரும், ஆஸ்திக சிரோன்மணிகளில் ஒருவருமான தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் அவர்கள் ‘பிறந்தது எப்படியோ?’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதி, அது பல பல்கலைக் கழகங்களில் துணைப் பாட நூலாகவும் வைக்கப்பட்டுள்ளது!

‘‘வாதாபி கணபதே பஜிம், பஜிம்‘’ என்று சங்கீத கச்சேரிகளில் கருநாடக சங்கீத பாடகர்கள் பாடு பொருளிலும் அது பொதிந்துள்ளது. என்றாலும், எப்படி எப்படியோ இதுபோன்ற கடவுள்கள் ‘இறக்குமதி’ செய்யப்பட்டன. அவை பக்தி என்ற கண்ணோட்டத்தில்; பகுத்தறிவாளர்களால் மூடநம்பிக்கை என்று கருதிடும் அளவே இருந்து வந்தது.

மகாராட்டிரா மாநிலத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் இந்த வீட்டுக்குள் வைக்கப்பட்ட ‘கணபதியை’ - பிள்ளையாரை, ஓர் அரசியல் ஆயுதமாக்கினார் பாலகங்காதர திலகர் என்ற சித்பவன் பார்ப்பனர்.

இவருக்கு வருண தர்மத்தில் ஆழ்ந்த வெறி உண்டு; பெண்களுக்குப் படிப்புக் கொடுக்கவே கூடாது என்ற மனுதர்மத்தினைப் பரப்பியவர். பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்தவர் என்று காங்கிரசில் ஹிந்து மகாசபையை உள்ளடக்கமாக்குவதற்குக் காரணமானவர்.

இவர் பிள்ளையாரைப் பெரிய அளவில் மகாராட்டிராவில் வைத்து அதையே ஓர் அரசியல் பிரச்சாரக் களமாக்கினார். பண்டிகைகளை வெறும் பண்டிகைகளாகக் கருதாமல், அதை ஓர் அரசியல் வாய்ப்பாக ஆக்கி, அன்றைய தனது பிரச்சாரத்திற்குப் பிள்ளையாரை ஆயுதமாக்கியவர்.

பிளேக் நோயும் - எலியும்! :

‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேடு ஆசிரியர் துர்காதாஸ் எழுதிய ஒரு நூலில், India From Curzon to Nehru and After என்ற சுயசரிதையில், மகாராட்டிராவில் பிளேக் நோய் கடுமையாகப் பரவியபோது பிரிட்டிஷ் அரசு எலிகளை வேட்டையாடி, பிளேக் நோய்த் தடுப்பு முயற்சிகளை மேற்கொண்டபோது, ‘‘நமது ஹிந்து கடவுளான விநாயகரின் வாகனத்தின்மீது தாக்குதல் நடத்தி, நமது புராதன ஹிந்து - கலாச்சாரத்தினை அழிக்க முயலுகிறார்கள்’’ என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கி, அதிலிருந்து மக்களிடம் பிள்ளையார் பக்தியை, அரசியல் ஆயதமாக்கியவர்.

தமிழ்நாட்டில் பரவாமலிருந்தது - மகாராட்டிரத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் அப்போது இது அவ்வளவு அதிகம் பரவவில்லை. மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை என்பது பிரபலம்.

தமிழ் மண்ணில் காலூன்ற பிள்ளையார் ஊர்வலம் என்ற தந்திரம் :

தமிழ்நாட்டில் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து மகாசபை போன்ற அமைப்புகளால் வேரூன்ற முடியவில்லை என்பதற்காக குறுக்குவழியில் கூலி ஆட்களைப் பிடித்து, ஆங்காங்கு பிள்ளையார் சிலைகளை வைத்து, அதன்மூலம் பக்தி போதையூட்டி, தமிழ் மண்ணை காவி மண்ணாக்குவதற்கு ஏராள பொருளைச் செலவழித்தே - இப்படி ஒரு கூத்து!

இதை வைத்து சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்துவது, அதிலும் எங்கெங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் வசிக்கிறார்களோ, அவர்களில் அப்பாவிகளை, கூலிப் படைகளாக்கி, கொண்டாட்டங்களை நடத்தி, மதக் கலவரத்திற்குத் தூபமிடுவதற்கு இந்தப் பிள்ளையார் பொம்மைகளை வைத்து, கடலில் கரைத்து, சுற்றுச்சூழலுக்கும் கேடு, சட்டம் - ஒழுங்கிற்கும், அமைதிக்குப் பங்கம் என்றாலும், சில ஆண்டுகளாக நடந்து வருகின்றது.

என்றாலும், தமிழ் மண் - சமூகநீதி மண்- பெரியார் மண் ஆனதால், இத்தகைய வித்தைகளால் பெரிய விளைவுகள்- அரசியல் லாபங்கள் அவர்களுக்குக் கிட்டவில்லை. தந்தை பெரியாரது பகுத்தறிவு இயக்கம் அதன் பணியை பல ஆண்டுகள் செய்தமையால், மகாராட்டிரம் போன்று மக்கள் மனதில் புகுந்து, தமிழ்நாட்டை பக்திப் போதையினால் தடுமாறச் செய்ய முடியவில்லை.

ஆனால், ஒவ்வொரு ஆண்டும் லட்சம் காவல்துறையினர் கண்காணிப்பு - மக்கள் வரிப் பணம் செலவு, அமைதிக்குக் குந்தகம்; இவற்றைத்தான் இவ்வாண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்ட காவிக் கட்சியினரின் முகத்தில் அடித்ததைப் போன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் முக்கிய கேள்வி எழுப்பினர்.

மூன்று நீதிபதிகளின் அதிரடித் தீர்ப்பு! :

‘‘பிள்ளையார் உங்களை ஊர்வலம் போகச் சொன்னாரா?’’, ‘‘வெகு சாதாரணமாக நடக்கவேண்டிய ஒரு நிகழ்வை, இவ்வளவு சிக்கல், பிரச்சினைகள் நிறைந்ததாக்கி, மக்களுக்கும், காவல்துறைக்கும் இப்படி தேவையற்ற சுமையை, தொல்லையை ஏன் தருகிறீர்கள்?’’ என்பதுபோல, மூன்று நீதிபதிகள், ஒரு தனி நீதிபதி - இருவர் கொண்ட அமர்வு ஒன்று கேட்டுள்ளது. பக்தியில் அரசியல் சாயத்தின் தீய விளைவு இது!

அரசமைப்புச் சட்டத்தின் மதச் சுதந்திர உரிமை என்பது லகான் இல்லாத குதிரைப் பாய்ச்சல் அல்ல. (பிரிவு 25, 26). Constitution of India states that subject to public order, morality and health, every religious denomination or any section there of shall have the right. 1. to establish and maintain institutions for religious and charitable purposes. 2. to manage its own affairs in matters of religion.

புராணப் புளுகுகள் மட்டுமல்ல - சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையும்! :

பொது அமைதி, ஒழுக்கம், சுகாதாரம் மற்ற அரசமைப்புச் சட்டத்தின் இரு பிரிவுகளுக்குக் (பிரிவு 25, 26) கட்டுப்பட்டவையே என்று கூறுவதால், நிபந்தனைக்கு உட்பட உரிமை அது என்பதை மதச் சுதந்திர உரிமை பேசும் ‘மகாபுத்திசாலிகள்’ உணரவேண்டும்.

பிள்ளையார் பிறப்புபற்றிய புராணக் கதைகளோ பலப்பல; விசித்திரமானதும், அருவருப்பும் நிறைந்த அவற்றைப் புறந்தள்ளினாலும், மக்களிடையே பொது அமைதி, சட்டம் - ஒழுங்கு கெட திருவிழாக்களையும், பண்டிகைகளையும் அனுமதிப்பது - மக்கள் நலன்மீதே ‘‘கொள்ளிக்கட்டையை வைத்து தலைசொரிந்து கொள்வதுபோல’’ ஆகும்!

அதைத்தான் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சில நாள்களுக்குமுன்பு ஆணி அடித்ததுபோல் கேட்டுள்ளார்கள். அதைக் கேட்டவுடன், ‘எங்கள் மனதை புண்படுத்திவிட்டீர்கள்’ என்று குற்றம் சுமத்த முயல்வார்கள். நியாயத்தை எவர் சொன்னாலும் கேட்பதுதான் பகுத்தறிவு.

பக்திப் போதைக்கு ஆளாகி, பகுத்தறிவை இழக்காதீர்! :

எனவே, ‘‘கோவில், பண்டிகைகளைப் பிரச்சார ஆயுதங்களாக்கிடவேண்டும்‘’ என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு பிரிவான விசுவ ஹிந்து பரிஷத்தின் வேலைத் திட்டமே இது என்பதைப் புரிந்துகொண்டு, அந்த பக்தி போதைமூலம், சமத்துவம், சகோதரத்துவத்தை, அறிவுச் சுதந்திரத்தைப் பலியிடாதீர்! சிந்திப்பீர் பக்தர்களே!

Also Read: ’6 மணிக்கு மேல்’.. அண்ணாமலை vs அ.தி.மு.க: மீண்டும் கூட்டணிக்குள் முற்றும் மோதல்- முகம் சுளிக்கும் மக்கள்!