Politics

”உள்ளம் முழுக்க இந்தி வெறி”.. இந்தியில் சட்டங்களின் பெயரை மாற்றிய பாஜக அரசு: சு.வெங்கடேசன் MP எதிர்ப்பு!

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு கூட்டணிக்கு ‘I-N-D-I-A’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயர்வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 'இந்தியா' என்ற பெயரை கேட்டாலே பா.ஜ.க தலைவர்கள் அலறி வருகின்றனர். பலர் நமது நாட்டின் பெயர் இந்தியாவே இல்லை பாரதம் என்றும் கூறி வருகின்றனர். தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்ட தொடரிலும் பா.ஜ.கவின் அச்சம் வெளிப்பட்டுள்ளது. அதேபோல் இவர்களது இந்தி திணிப்பு முகமும் வெளியே வந்துள்ளது.

அதாவது, இந்தியா என்ற பெயரை மாற்றும் விதமாக சட்டங்களின் பெயரில் இருந்த இந்தியா என்ற பெயரை நீக்கி பாரத் என பெயர் வைத்துள்ளனர். அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றை ஒன்றிய பாஜக அரசு மாற்றி, அதற்கு பதில், பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா என்ற பெயர்களை சூட்டுவதற்கான மசோதாக்களை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் சம்ஸ்கிருத திணிப்பிலும் பா.ஜ. க பகிரங்கமாக ஈடுபட்டு வருகிறது.

இதையடுத்து பா.ஜ.க அரசின் இந்த இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்புக்கு எதிராக நாம் முன்பு நின்றிருக்கிறோம். இனியும் சமரசமற்ற உறுதியுடன் நிற்போம்.இந்தி காலனிய வாதத்துக்கு எதிரான போராட்ட நெருப்பு மீண்டும் மூட்டப்பட்டிருக்கிறது. நம் அடையாளத்தை இந்தியைக் கொண்டு மாற்ற முயலும் பாஜகவின் முயற்சி, உறுதியாக எதிர்க்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "இந்தியில் மசோதாக்களின் பெயர் நியாய சன்கிதா, சுரக்சசன்கிதா, பாரதீய சாக்சிய. கடைசிநாளில் 512 பக்க மசோதாக்கள் அவசரமாக தாக்கல்.இந்தியாவை இந்தி மயமாக்கும் செயல்திட்டத்தின் வெறிகொண்ட முன்னெடுப்பு. உதடுகளில் திருக்குறள்...பாரதி... உள்ளம் முழுக்க இந்தி வெறி. பாஜகவின் உண்மை முகம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “சட்டங்களின் பெயரை இந்தி, சமஸ்கிருதத்தில் மாற்றுவதா?; சோவியத் ரஷ்யா போல இந்தியா சிதறும்”: எச்சரித்த வைகோ!