Politics

Blah Blah Blah.. மணிப்பூர் பற்றி பேசாத பிரதமர் மோடியின் உரையை விமர்சித்த The Telegraph ஆங்கில நாளேடு!

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இந்தியா கூட்டணி எம்.பிக்கள் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்து வந்தனர்.

ஆனால் இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் இந்தியக் கூட்டணி எம்.பிக்கள் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்களவையில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்று விதி உள்ளதால் வேறு வழி இல்லாமல் சபாநாயகர் விவாதத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.

இதையடுத்து ஆகஸ்ட் 8,9,10 ஆகிய மூன்று நாட்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினர். குறிப்பாக ராகுல் காந்தி மணிப்பூரில் பாரதமாதாவையே கொன்று விட்டார்கள் என காட்டமாக விமர்சித்தார்.

இக்கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் சிறிது நேரம் மட்டுமே கலந்து கொண்ட பிரதமர் மோடி நேற்று நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பதிலளித்துப் பேசினார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இதில், ஐந்து நிமிடம் மட்டுமே மணிப்பூர் பற்றிப் பேசினார். இவர் பேச ஆரம்பித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் மணிப்பூர் என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்தாமல் ஏதேதோ பேசி வந்தார். இதற்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர்.. மணிப்பூர் என முழக்கம் எழுப்பினர். இருந்தும் பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேசவில்லை.

இதனால் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிரதமர் மோடியின் கண்டித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து மோடியின் உரைக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், The Telegraph ஆங்கில நாளேடு தனது முதல் பக்கத்தில் பிரதமர் மோடியின் உரையை விமர்சித்து எழுதியுள்ளது. அதில், நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பிரதமர் 2 மணி நேரம் 13 நிமிடங்கள் பேசினார். முக்கிய பிரச்சினையான மணிப்பூர் குறித்து முதல் ஒரு மணி நேரம் 40 நிமிடங்களுக்கு அவர் எதுவும் பேசவில்லை. இதனால் மணிப்பூர் மணிப்பூர் என்று முழக்கமிட்டு எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் பேசிய பிரதமர் மணிப்பூருக்கான ஒதுக்கியது 5 நிமிடங்கள் 30 நொடிகள் மட்டுமே. அப்போது கூட பிரச்சினைகளுக்குக் காரணம் காங்கிரஸ் கட்சி, ஜவஹர்லால் நேரு என்று பிரதமர் மோடி பேசியதாக முதல் பக்க செய்தியில் 4 காலங்களுக்கு பிளா பிளா பிளா.. என்று பதிவு செய்து விமர்சித்துள்ளது.

Also Read: ”பா.ஜ.க.வின் பாதம் தாங்கி பழனிசாமி”.. அ.தி.மு.க துரோகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!