Politics

#INDIAvsNDA வலுவடையும் எதிர்க்கட்சிகள் கூட்டணி: கலக்கத்தில் பா.ஜ.க: பெங்களூரு கூட்டத்தின் முக்கிய முடிவு!

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பது என அனைத்து கட்சித் தலைவர்களும் பேசியுள்ளனர். மேலும் ஒரு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தாக இருந்தது.

இதையடுத்து நேற்று மாலை பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இன்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 36 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட ஆறு முக்கிய அடிப்படை செயல்திட்டங்களை உருவாக்குவது குறித்தும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது மட்டுமில்லாமல் அதை உரிய முறையில் தேர்தல் களத்தில் செயல்படுத்த பல்வேறு செயல் திட்டங்களை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஆலோசனைக் கூட்டம் பிடித்த பிறகு எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு ‘I-N-D-I-A’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயர்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் பா.ஜ.க அச்சத்தில் உள்ளது. ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் காப்பதற்கு ஒன்றிணைந்துள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வீழ்த்தப்படுவது உறுதி என மல்லிகார்ஜுன கார்கே" தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளில் இருக்கும் தலைவர்களை இணைக்கவே முடியாது என பலரும் கூறிவந்தனர். ஆனால் தற்போது இரண்டாவது கூட்டத்தையும் நடத்தி, கூட்டணிக்குப் பெயர் வைத்து மூன்றாவது கூட்டத்தை மும்பையில் நடத்த முடிவு செய்து எதிர்க்கட்சிகள் கூட்டணி வலுவடைந்து வருகிறது. தற்போது எதிர்க்கட்சிகளின் கூட்டம் வலுவடைந்து வருவதால் பா.ஜ.க கூட்டணிக்குப் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தான் இன்று பா.ஜ.கவும் தனது கூட்டணி கட்சிகளுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறது.

Also Read: 'தமிழ்நாடு'- சொல் அல்ல ; தமிழரின் உயிர்; இந்தியா முழுதும் பரவட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!