Politics

இந்த சட்டம் தோற்கடிக்கப்பட்டால் அது பாராளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி ஆட்டம்- அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து

டெல்லியில் 2014ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. அதிலிருந்தே டெல்லி அரசின் முடிவுகளில் ஒன்றிய அரசு தொடர்ச்சியாகத் தலையிட்டு வருகிறது. இதனால் ஒன்றிய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.மேலும் 2019ம் ஆண்டு டெல்லி அரசுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை என நீதிபதி பூசன் அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து ஒன்றிய அரசின் அதிகாரத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அண்மையில் வழங்கி இருந்தனர். நீதிபதிகளின் தீர்ப்பில்,"2019ல் நீதிபதி அசோக் பூஷன் அமர்வு வழங்கிய தீர்ப்பில் உடன்பாடில்லை, மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே சட்டப்பேரவைகளில் சட்டம் நிறைவேற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசமாக இருந்தாலும் டெல்லி அரசு கூட்டாட்சியின்படியே இயங்குகிறது. ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கொள்கை என்பது நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பின் அங்கம். ஒரு சில குறிப்பிட்ட அம்சங்களில் மட்டுமே ஒன்றிய அரசு தலையிடும் அதிகாரம் உள்ளது. அதிகாரிகள் அமைச்சர்களின் உத்தரவைச் செயல்படுத்துவதைத் தடுத்தால் கூட்டுப் பொறுப்பு பாதிக்கப்படும்.

சட்டமன்ற அதிகாரத்துக்கு வெளியே உள்ள சில அம்சங்களில் மட்டுமே துணை நிலை ஆளுநர் தலையிட முடியும். மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரம் சட்டமன்றத்துக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. ஜனநாயக அரசாங்கத்தில் நிர்வாக அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம்தான் இருக்க வேண்டும். டெல்லியில் துணை நிலை ஆளுநரை விட முதலமைச்சருக்கே அதிகாரம் உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை குலைக்கும் வகையில், டெல்லியின் அதிகாரத்தை துணை நிலை ஆளுநருக்கு வழங்கும் அவசரச் சட்டத்தை இரவோடு இரவாக கொண்டு வந்திருக்கிறது ஒன்றிய அரசு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசமன்றத்துக்கே அதிகாரம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், 'எந்த சட்டமன்றமும் நீதிமன்றமும் உத்தரவும் மாற்ற முடியாது' என்கிற ஷரத்தோடு அவசரச் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த அவசர சட்டம் அடுத்த 6 மாதத்துக்குள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றினால் மட்டுமே சட்டமாக அமலாகும் நிலையில், இந்த சட்டத்தை நிறைவேற்றவிடாமல் செய்ய டெல்லி ஆம் ஆத்மீ அரசு தீவிரம் காட்டி வருகிறது. மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பாண்மை இருக்கும் நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பெரும்பாண்மை பலத்தை பெற்றுள்ளன.

இதனால் எதிர்கட்சிகளின் ஆதரவை பெற டெல்லி அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரைத் சந்தித்து ஆதரவு கோரிய அவர் தற்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் , "அவசரச்சட்டம் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டால், அதுதான் 2024ம் ஆண்டின் மக்களவை தேர்தலுக்கான அரையிறுதி ஆட்டம். 2024ம் ஆண்டில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதென்பதற்கான செய்தியாக அது இருக்கும்" என்று கூறியுள்ளார்.

Also Read: ரூ.2000 நோட்டால் பதுக்கல் அதிகரிக்கும் என்று மோடிக்கு முன்பே தெரியும்- மோடியின் முன்னாள் செயலாளர் கருத்து