Politics

மீண்டும் வெளிப்பட்ட இரட்டை வேடம் .. கர்நாடகாவில் தேர்தலில் இலவச வாக்குறுத்தைகளை அள்ளிவீசிய பாஜக !

உத்தர பிரதேச மாநிலம், புந்தேல் கண்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, இலவத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இலவச திட்டங்கள் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் எழுந்தன.

மோடியின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், "பொதுமக்களுக்கான சமூக நலத்திட்டங்களை இலவசம் என்று ஒரு குறுகிய அடைப்புக்குள் அடக்கிடாமல், கிராமப்புற ஏழை எளிய மக்களிடையே நடைபெற்றுள்ள பொருளாதாரப் புரட்சி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

அதன்பின்னர் இலவசம் குறித்து ஆங்கில ஊடகத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோரும் மோடியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில், கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தலில் இலவச வாக்குறுதிகளை பாஜக அள்ளி வீசியுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்ட இந்த தேர்தல் வாக்குறுதியில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு விநாயகர் சதுர்த்தி, தீபாவளியன்று இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும், தினமும் அரை லிட்டர் இலவச பால், ஒவ்வொரு வார்டிலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் . 5 கிலோ அரிசி, பருப்பு இலவசமாக வழங்கப்படும். 10 லட்சம் பேருக்கு கர்நாடகாவில் இலவச வீட்டு மனைகள் வழங்கப்படும்.ஆண்டுக்கு ஒரு முறை வயதானவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை" போன்ற வாக்குறுதிகள் கூறப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருந்த பிரதமர் மோடி இலவச திட்டங்கள் குறித்தும், அதனை அறிவிக்கும் கட்சிகள் குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், தற்போது பாஜக அதே கர்நாடகாவில் இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது அதன் இரட்டை வேடத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.

Also Read: "பதக்கத்தை விட இங்கே நீதியை வெல்வதே மிகப்பெரிது"- பாஜக விமர்சனத்துக்கு ஒலிம்பிக் நாயகன் காட்டமான பதிலடி !