Politics

பாஜகவிலிருந்து முன்னாள் முதல்வர் விலகல்.. ரகசியங்களை வெளியிடுவதாக மிரட்டல்.. பரபரக்கும் கர்நாடக அரசியல் !

கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் சில நாட்களில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இது தவிர முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கொடுக்காத நிலையில் அவர்கள் அங்கிருந்து விலகுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கிய எம்.எல்.ஏக்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ள நிலையில் தற்போது அது பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை அளித்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது வடகர்நாடகாவில் பாஜகவின் முதல் எம்.எல்.ஏவும், முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவிலிருந்து விலகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர், சபாநாயகர், முதல்வர் உட்பட பல்வேறு உயர் பதவிகளை வகித்த ஜெகதீஷ் ஷெட்டர் இந்த தேர்தலிலும் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தார்.

ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்க மறுத்ததோடு பாஜகவின் முக்கிய தலைவர்கள் அவரை சந்தித்து மத்தியில் உயர்ந்த பதவி வழங்குவதாக உறுதி அளித்ததாக கூறப்பட்டது. ஆனால், அதனை ஏற்க மறுத்துள்ள ஜெகதீஷ் ஷெட்டர் “நாளை சபாநாயகரை சந்தித்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா கடிதத்தை கொடுத்து பாஜகவிலிருந்து விலகுவேன். இதன் பின், ஒவ்வொரு நாளும், பல முக்கிய விஷயங்களை அவிழ்த்து விடுவேன்” என அதிரடியாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

Also Read: “சிந்து - கீழடியில் கிடைத்த கருப்பு - சிவப்பு நிறக் குறியீடு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!