Politics

பிற்படுத்தப்பட்டோர், தலித், பெண்களை இழிவுபடுத்துகிறது- வடமாநிலங்களில் எரிக்கப்பட்ட துளசிதாசரின் ராமாயணம்!

16-ம் நூற்றாண்டில் துளசிதாசர் என்பவரால் அவதி மொழியில் எழுதப்பட்ட 'இராமன் சரித மானஸ்' என அழைக்கப்படும் துளசிதாசரின் ராமாயணம் இந்திய அரசியலில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியது. அதுவரை பெரும்பாலான மக்களுக்கு தெரியாமல் இருந்த ராமர் என்ற கடவுள் அதன்பின்னர் சாதாரண மக்களுக்கும் தெறித்த பெயரானார்.

ஆனால், துளசிதாசரின் ராமாயணம் முழுக்க முழுக்க சாதிய பேதம் கொண்டது என்றும், நால்வர்ணத்தை உயர்த்திப்பிடித்து பிற்படுத்தப்பட்டசமூக மக்கள் மற்றும் பெண்களுக்கு முற்றிலும் எதிரான மனநிலை கொண்டது என்றும் விமர்சனம் பல ஆண்டுகளாக முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது துளசிதாசரின் ராமாயணத்தில் பிற்படுத்தப்பட்டசமூக மக்களை குறித்து அவதூறாகப்பேசியுள்ள கருத்துக்களை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கவேண்டும் என சில அமைப்புகள் தற்போது வடஇந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் பீகாரை ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவரும் மாநில கல்வி அமைச்சருமான சந்திரசேகர் பல்கலைக்கழகம் ஒன்றில் பேசியபோது " துளசிதாசரின் ராமாயண சமூகத்தில் வெறுப்பை பரப்புகிறது. கீழ் சாதி மக்கள் கல்வி கற்றால், பாம்பு குடித்த பாலைப் போல விஷமாகிவிடுவார்கள் என்று கூறுகிறது" எனக் கூறியிருந்தார்.

bihar minister chandrashekhar

அதன்பின்னர் உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் முக்கிய உறுப்பினராணா சுவாமி பிரசாத் மௌரியா "நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். ஆனால் மதத்தின் பெயரால் ஒரு சமூகம் அல்லது ஜாதி இழிவுபடுத்தப்பட்டால் அது ஆட்சேபனைக்குரியது" எனக் கூறி பெண்கள், பழங்குடியினர், பட்டியலின மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை இழிவுபடுத்தும் மற்றும் அவமதிக்கும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இது போன்ற கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அமைச்சரை பதவி நீக்கம் செய்யவேண்டம் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரம் பல்வேறு சமூகத்தை சேர்ந்த அமைப்புகள் ராஷ்டிரிய ஜனதா தள அமைச்சரின் கருத்துக்கு ஆதரவாக பேரணி நடத்தினர் .

இதனிடையே துளசிதாசரின் ராமாயணத்தின் சில பகுதிகளை போராட்டக்காரர்கள் சிலர் எரித்ததாக எழுந்த தகவல் அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் 2 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.