Politics

"அதானி நிறுவனங்களின் பத்திரங்களை இனி ஏற்றுக்கொள்ளமாட்டோம்" - சுவிட்சர்லாந்து சர்வதேச வங்கி அறிவிப்பு !

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டு கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்த சரிவிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சம் பேர் வேலை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.ஆனால் அதானி குழும நிறுவனத்தின் வருவாய் மட்டும் கணிசமாக உயர்ந்தது. இது எப்படி என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

அதானி குழும நிறுவனங்களின் செயல்பாடுகளை ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் இரண்டு ஆண்டாக ஆய்வு செய்து இந்த குற்றச்சாட்டை நாங்கள் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. அதோடு பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

அதேபோல் கரீபியன் நாடுகள், மோரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்தி வருகிறார். அரசாங்கம் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் உதவியுடனே அந்த மோசடிகள் நடந்துள்ளது என பகிரங்கமாகவே ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நிறுவனங்களில் பங்குகள் மூன்று ஆண்டுகளில் 819% உயர்ந்துள்ளது. இந்த நிறுவனங்கள் அதிகமான கடனை பெற்றுள்ளன. இந்த 7 நிறுவனங்களில் 5 நிறுவனங்களில் விகிதங்கள் 1%க்கும் கீழே உள்ளது. இதனால் பணப்புழக்க அழுத்தத்தைச் சந்தித்துள்ளது.

அதானி குழுமம் பணமோசடி, வரி செலுத்துவோர் நிதி திருட்டு, பங்குச்சந்தை மோசடி என 17 பில்லியன் டாலர்கள் வரை மோடி செய்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக அதானி நிறுவனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அவரது சொத்துமதிப்பு 1.4 லட்சம் கோடி சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சரிவு பல நாட்களுக்கு தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தி எதிரொலியாக உலகெங்கும் அதானி நிறுவனங்களின் மீதான நம்பகத்தன்மை மிகப்பெரிய அளவில் அடிவாங்கியுள்ளது. போலியான முறையில் பங்கு விலைகளை உயர்த்தியதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை விலக்கி வருகின்றன.

இந்த நிலையில், கடனுக்கான பிணையாக அதானி குழும நிறுவனங்களின் பத்திரங்களை இனி ஏற்றுக்கொள்ள இயலாது என சுவிட்சர்லாந்தை சேர்ந்த Credit Suisse என்ற சர்வதேச முதலீட்டு வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து இதேபோன்று பல்வேறு நிறுவனங்களும் அறிவிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒருவேளை அடுத்தடுத்த நிறுவனங்கள் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டார் அது அதானி நிறுவனங்களின் பத்திரங்களின் மதிப்பை கிட்டத்தட்ட குப்பையாக்கும். சர்வதேச அளவில் ஒருமுறை இந்த நிலையை எட்டினால் அதன்பின்னர் அந்த நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை அடியோடு சரிந்துவிடும். இது போன்ற காரணங்களால் இந்த அறிவிப்பு அதானியை கடும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

Also Read: "இந்த அரசுக்கு கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள்".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!