Politics

"பயங்கரவாத குழுவின் தலைவர் நேதாஜி" -பாஜக MLA கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. போலிஸில் புகார் !

சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களை அகிம்சை வழியில் எதிர்த்தவர் மகாத்மா காந்தி. ஆனால் ஆயுதம் ஏந்தி துணிச்சலாக எதிர்த்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பெரிய ராணுவப் படையையே திரட்டியவர். இவரின் இந்த படையில் ஏராளமான இளைஞர்கள் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடினர்.

இந்நிலையில் நேற்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்த நாள் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தினர். கடந்த சில ஆண்டுகளாகவே பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.ஸ் அமைப்புகள் தொடர்ந்து நேதாஜியை முன்னிலைப்படுத்தி பேசி வரும் நிலையில், பா.ஜ.க மற்றும் RSS சித்தாந்தமும் நேதாஜியின் சித்தாந்தமும் எதிரெதிர் துருவங்கள் என்றும் ன்னுடைய தந்தை ஓர் இடதுசாரி என்றும் நேதாஜி மகள் அனிதா போஸ் பாஃப் தெரிவித்திருந்தார்.

இதனிடையே நேற்று குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க எம்எல்ஏ யோகேஷ் படேல் தன்னுடைய முகநூல் பக்கத்தில், "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் போது நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்தார். பயங்கரவாதிகள் குழுவின் தலைவராக இருந்தார்.சோசலிச இயக்கத்தை ஆதரித்தார்" என்று கூறியிருந்தார்.

நேதாஜி பயங்கரவாதிகள் குழுவின் தலைவராக இருந்தார் என்று அவர் கூறியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும், பா.ஜ.கஎம்.எல்.ஏ மீது காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவரின் முகநூல் பக்கத்தில் நேதாஜி குறித்த சர்ச்சை கருத்து நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனது கருத்துக்கு மன்னிப்பு தெரிவித்து அவரின் முகநூல் பக்கத்தில் மற்றொரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், "பயங்கரவாதி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மொழி பெயர்த்ததில் தவறு ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

Also Read: "நேதாஜிக்கும் - BJP,RSSக்கும் எந்த சம்பந்தமும் இல்லை": மகள் அனிதா போஸ் பாஃப் கூறியது என்ன?