Politics

“பிரதமர் என்றால் மன்னிப்பு கிடைத்துவிடும்”-தேர்தல் விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடி.. மம்தா விளாசல் !

குஜராத் மாநிலத்தில் 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பதவிக் காலம் இந்த (டிசம்பர்) மாதத்துடன் முடிவடைகிறது.

இதனால் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் ஆணையம் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும், முதற்கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தது.

அதன்படி கடந்த 1-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று (5-ம் தேதி) வாக்குப்பதிவு நிறைவடைகிறது. வாக்குப்பதிவு எண்ணிக்கை வரும் டிசம்பர் 8-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சி சார்பில் வேட்பாளர்கள் பலர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் இன்றுடன் வாக்குப்பதிவு நிறைவடைவதால் பிரதமர் மோடியின் சொந்த ஊரான சபர்மதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த ஊரான அகமதாபாத்திலும் வாக்குப்பதிவு சாவடிகளில் தங்கள் வாக்கை செலுத்தினர். காந்திநகர் ராஜ்பவனில் இருந்து கிளம்பிய பிரதமர் நரேந்திர மோடி, ராணிப் நிஷான் பப்ளிக் பள்ளியில் தனது வாக்கு பதிவு செய்தார்.

அப்போது வாக்களிக்கச் சென்ற பிரதமர் மோடி இரண்டரை மணி நேரம் சாலை பேரணியாக சென்று வாக்கு செலுத்தினார். தேர்தல் நடைபெறும் நாளில் எந்த பிரச்சாரமும், பேரணியும் மேற்கொள்ளக்கூடாது என விதிமுறைகள் இருக்கிறது. தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, ஜி-20 மாநாட்டுக்கு செல்வதற்கு முன்பு செய்தியளர்களிடம் பிரதமரின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், "பிரதமர் என்றால் தேர்தல் விதியை மீறலாமா? வாக்குப்பதிவு நாளன்று பேரணிகளுக்கு அனுமதியில்லை என்பது விதி. ஆனால் பிரதமரும், பாஜகவினரும் விவிஐபிகள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்களுக்கு மன்னிப்பு கிடைத்துவிடும்" என்று விமர்சித்துள்ளார். குஜராத் தேர்தல் காரணமாக மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மிகட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்ஜிக்கும் போது மியாவ் என கத்தும் பூனைதான் தமிழக பாஜக - சு.சாமி தாக்கு !