Politics

அனைவரும் சராசரி மக்கள் அல்ல.. கோபம் திசைதிருப்பப்பட்டு முதலாளித்துவம் மக்களை ஏமாற்றுவது எப்படி ?

லிபரல் என்பதில் என்ன வகை அரசியல் இருக்கிறது?

லிபரலாக இருப்பது என்பது லிபரலைசேஷனின் ஒரு கூறு என சொல்லலாம். அதாவது உங்களின் உழைப்பு தேவை. பிற எதுவும் உங்களிடமிருந்து தேவையில்லை என உருவான லிபரலைசேஷன் உலகின் பல வித கலாசாரக் கூறுகளை உள்ளடக்க வேண்டிய தேவை இருந்தது. ஊர் ஊராக சென்று சர்க்கஸ் போடுபவர்கள் எல்லா ஊர் கலாசாரத்தையும் எடுத்துக் கொள்வதை போல. இதில் உள்ள ஒரு பிரச்சினை என்றால் எல்லா ஊர்களிலும் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு ஒரு கலாசாரம் மக்களை ஒடுக்கிக் கொண்டிருக்கும். அந்த கலாசாரத்தைதான் கணக்குப்படி எதிர்க்க வேண்டும். ஆனால் இந்த லிபரல் பேர்வழிகள் அவர்களையும் ஏற்றுக் கொள்வார்கள். அவர்களும் எல்லாரையும் போன்ற சராசரி மக்கள்தானே என்பது அவர்களின் வாதமாக இருக்கும்.

அவர்கள் எல்லா மக்களையும் போன்றவர்கள் அல்ல என்பது அந்த ஊர் மக்களை கேட்டால்தான் தெரியும். அவர்கள்தான் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் என்கிற உண்மை தெரிந்துவிடும். ஆனால் லிபரல்கள் 'எல்லாரும் ஒன்று' என்கிற கூட்டாஞ்சோறு கதை அவிழ்த்துவிடுவார்கள்.

முக்கியமாக முதலாளித்துவத்தின் லிபரல்வாதம் அரசை ஏற்கும். அரசியல்வாதியைத்தான் ஏற்காது. அரசியலை சாக்கடை என சொல்லும். சித்தாந்தமற்ற சித்தாந்தமே சரி என சொல்லும்.

சமூக அக்கறை கொண்ட இயல்பான நபரெனில் நிச்சயமாக ஓர் அரசியல் சித்தாந்தத்தை அவர் கண்டடைவார். கண்டடையாமல் நிற்கிறார் எனில் அதுவே அவரின் அரசியல் நிலைப்பாடு ஆகிறது. என்ஜிஓ, சிவில் சொசைட்டி என உதிரி அரசியல்கள் செய்யும் பாணியாக இருக்கலாம்.

NGO, Civil Society அரசியல்களில் என்ன பிரச்சினை?

சிவில் சொசைட்டிகளுக்கு இருக்கும் lobbying வழிகளும் மக்கள்திரளும் பெரும் போராட்டங்களை கட்டமைக்கும். ஆனால் அரசியல் தீர்வுகளுக்கு வழிவகுக்காது.

மக்களின் கோபத்தை மடை மாற்றி ஒரு போராட்டம் என்கிற சாகசத்தை வழங்கிவிட்டு ஆளும்வர்க்கத்துக்கான அரசியலையே திரும்ப கொண்டு வருவதுதான் சிவில் சொசைட்டிகளின் பணி. ஆகவேதான் சிவில் சொசைட்டிகளாக, உதிரி அரசியலர்களாக அமைப்புடன் இயங்காதவர்கள் அனைவரிடமும் ஆளும்வர்க்க-முதலாளித்துவ தன்மைகளை இயல்பாக பார்க்கலாம்.

Occupy Wallstreet தொடங்கி உலகம் முழுக்க பல சிவில் சொசைட்டி போராட்டங்கள் நடந்திருக்கின்றன. வெற்றி பெற்றவை எத்தனை என சொல்லுங்கள்? எகிப்தை மட்டும் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அங்கும் முபாரக்குக்கு பிறகு என்ன நேர்ந்திருக்கிறது?

பிரமிடின் உயரத்தில் ஒருவர் நிற்கிறார். கீழே ஒருவர் நிற்கிறான். உயரத்தில் வலுவாக நின்று கொண்டே கீழே இருப்பவரை பார்த்து இரங்குவது உண்மையான அரசியலா அல்லது வெற்று பாவனையா? கீழே இறங்கும் முயற்சியை கூட யோசிக்காமல் கீழே நிற்பவரின் ஒடுக்குமுறையை எப்படி பேசிட முடியும்? ஏனெனில் அவள்/ன் கீழே நிற்பதன் காரணமே பிரமிட் கொண்டிருக்கும் உயரம் மட்டும்தான். இல்லையெனில் கீழே நிற்பவர் பிரமிடின் உச்சியை எளிதாக அடைந்திட முடியுமே!

எனவே ஏற்கனவே சமூக உயரங்களில் இருக்கும் சாதி மற்றும் வர்க்கம் கொண்டு உருவாக்கப்படும் அமைப்புகளிலிருந்து சமூக விடுதலை ஏற்படுவதில்லை. அவர்களில் முயற்சி உண்மையாகவே இருந்தாலும்.