Politics

ஊழலில் மூழ்கிப்போன கர்நாடக பா.ஜ.க அரசு.. இப்ப என்ன செய்ய போகிறார் மோடி?: சித்தராமையா கேள்வி!

கர்நாடகாவில் கடந்த 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரை எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது, அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு ஒப்பந்தங்களை வழங்குவதிலும், பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் வீட்டுமனைகள் வழங்கியதிலும் எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இந்த புகார் குறித்து விசாரணை நடத்தக்கோரி பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆப்ரஹாம் என்பவர் லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால், லோக் ஆயுக்தா நீதிமன்றம் எடியூரப்பா உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்த அனுமதி வழங்கவில்லை.

இதனை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆபிரகாம் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், இந்த முறைகேடு குறித்து விரிவாக விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, எடியூரப்பா மீது பெங்களூரு லோக் அயுக்தா போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் ஊழல் தாண்டவம் ஆடுகிறது என முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்துப் பேசிய சித்தராமையா, " ஒன்றிய பா.ஜ.க அரசால் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியை இழந்துவிட்டனர். சாதி, மதம் இடையேயான இணைப்பை உடைக்க பார்க்கிறது பா.ஜ.க.

ஊழல் செய்ய விடமாட்டேன் என பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால் கர்நாடகாவில் ஊழல் தாண்டவமே ஆடுகிறது. இப்போது என்ன செய்ய போகிறார் பிரதமர் மோடி?. எனது 40 ஆண்டுகால அரசியலில் இதுபோன்ற ஒரு ஊழலை நான் பார்த்ததே இல்லை" என தெரிவித்துள்ளார்.

Also Read: ஊழல் வழக்கில் சிக்கிய எடியூரப்பா மற்றும் குடும்பம்.. லோக் ஆயுக்தா வழக்கு பதிவு: விரைவில் கைது?