Politics

“போலி சுதேசிகளின் வேடம் அம்பலம்.. மோடி கும்பலுக்கு தெரியுமா கொடியின் மேன்மை”: தீக்கதிர் ஏடு கடும் கண்டம்!

இந்திய திருநாட்டில் 74 ஆண்டுகளாக இந்திய தேசியக் கொடி பருத்தி நூல் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இத்தகைய தொன்மையை மாற்றி அவமதிக்கும் வகையில் தற்போதைய பிரதமர் மோடி பாலியஸ்டர் துணியால் தயாரிக்கப்பட்ட தேசிய கொடியை அங்கீகரித்ததால் கதர் நிறுவனம் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டது என்றும் "போலி சுதேசிகளின் வேடம் அம்பலம்!" என்ற தலைப்பில் தீக்கதிர் நாளிதழ் 25.7.2022 தேதிய தலையங்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளது.

அது வருமாறு :-

பருத்தி நூலால் நெய்யப்பட்ட துணியிலிருந்து தயாரிக்கப்படும் தேசியக்கொடியை ஏற்றுவதே இந்தியாவின் பாரம்பரியம். தேசத் தந்தை மகாத்மா காந்தி கதர் ஆடைகளை வாங்குங்கள்; அது தான் ஏழைகளை மேம்படுத்தும் என்றார். அவரது வாக்கை காப்பாற்றும் வகையில் கடந்த 74-ஆண்டுகளாக பருத்தி நூலால் நெய்யப் பட்ட துணிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் கொடியைத் தான் தில்லி செங்கோட்டை தொடங்கி ஒன்றிய-மாநில அரசு அலுவலகங்கள் உட்பட நாடு முழுவதும் ஏற்றப்பட்டு வந்தது.

எதையுமே சட்டவிரோதமாகச் செய்யும் மோடி அரசு சுதந்திரதின பவளவிழா ஆண்டில் பாலியஸ்டரால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடியை ஏற்றலாம் என திருத்தம் செய்தது. இதனால் ஒன்றிய அரசின் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கதர் நிறுவனம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

தேசியக் கொடியை தயாரிப்பதற்கென்றே ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் கர்நாடகா மாநிலம் ஹுப்ளியில் உள்ள கர்நாடக காதி கிராமோத்யோக் சம்யுக்த சங்கம் தான் அது. ஒவ்வொரு ஆண்டும், ஜூலை இறுதிக்குள், சம்யுக்த சங்கம் ரூ.2.5 கோடி மதிப்பிலான தேசியக் கொடிகளை தயாரித்து அனுப்புகிறது.

ஆனால், பாலியஸ்டர் துணியால் செய்யப்பட்ட கொடிகளை அனுமதிக்கும் விதமாக தேசியக் கொடி சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் செய்ததால் காதி நிறுவனத்திற்கு ஆர்டர் சரிபாதியாகக் குறைந்துவிட்டது. ஏற்கனவே மோடி அரசு ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்தை தொடங்கிய போது காதி நிறுவனத்தின் கொடிகளை பயன்படுத்தவில்லை.

மூவர்ணக் கொடி சட்டத்தில் திருத்தம் என்ற செய்தி வந்ததும், காதி ஊழியர்கள், கொடி சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினர்.

காதியை கைகழுவிய மோடி அரசைக் கண்டித்து ஜூலை 27-ஆம் தேதி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் மூவர்ணக் கொடியை இரவிலும் பகலிலும் பறக்க விடலாம் எனக் கூறி கொடி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது.

ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து ஒன்றிய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், மூவர்ணக் கொடியை காட்சிப்படுத்துவது, ஏற்றுவது மற்றும் பயன்படுத்துவது ஆகியவை இந்தியக் கொடிச் சட்டம் -2002 மற்றும் கொடியை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம், 1971 ஆகிய பிரிவுகள் அடிப்படையிலான உத்தரவு 2022-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி திருத்தப்பட்டுள்ளது என்றும் அதன்படி தேசியக் கொடியை திறந்த வெளியில், வீடுகளில் இரவிலும்-பகலிலும் பறக்கவிடலாம் என்றும் கூறியுள்ளார்.

போலிகளுக்கு தெரியுமா கொடியின் மேன்மை!" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..” : தி.மு.க வரலாற்றில் முக்கியமான நாள் இன்று..!