Politics

தனிநபரின் தனித் தகவல்களை வைத்து நடக்கு அரசியல்..? : ‘Facebook’ பற்றி நீங்கள் அறிந்திராத அதிர்ச்சி தகவல்!

முகநூல் சமூகதளத்தின் உரிமையாளரை நீங்கள் அறிந்திருக்கலாம். மார்க் சக்கர்பெர்க்! கடந்த 2018ம் ஆண்டில் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ‘நேற்று இரவு நீங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் பெயரை சொல்ல முடியுமா’ என்றும் ’இந்த வாரத்தில் நீங்கள் குறுந்தகவல்கள் அனுப்பியவர்களின் பெயர்களை சொல்ல முடியுமா’ என்றும் உறுப்பினர் கேட்கிறார். ஆனால் மார்க் சக்கர்பெர்க் பொதுவெளியில் தனது தனிப்பட்ட விஷயங்களை வெளிப்படுத்த முடியாது என சொல்லி மறுக்கிறார். ஆனால் முகநூல் என்கிற பொதுவெளியில் இவை எல்லாமும் சாத்தியப்படுகிறது என்பதே உறுப்பினரின் அடிப்படைக் கேள்வி.

அந்தக் கேள்விக்கான காரணம், முகநூல் பயன்படுத்தும் அமெரிக்க மக்களின் தனித் தகவல்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம், அந்த நிறுவனங்கள் அமெரிக்க தேர்தலையே திசைதிருப்புகின்றன என்கிற குற்றச்சாட்டுதான்.

அரசையே தீர்மானிக்குமளவுக்கு தனித்தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன எனில், தனிமனிதர்களின் நிலை என்னவென யோசித்துப் பாருங்கள். சமூகத்தில் இருக்கும் எல்லா குற்றங்களும் தண்டனைகளற்ற வெளியில் நிகழ்த்த இணையம் வாய்ப்பு வழங்குகிறது. இணையவெளியில் நிகழ்த்தப்படும் குற்றங்களில் பலவகை இருக்கின்றன. அவற்றின் பெரும்பாலானவற்றை ஐந்து வகைகளில் அடக்கி விடலாம்.

முதலாவது, அச்சுறுத்துதல்.

இணையத்தில் இருக்கும் ஒரு நபருக்கு தவறான குறுந்தகவல்களை அந்த நபரின் விருப்பத்துக்கு மாறாக அனுப்பப்படும். ஒருமுறை, இருமுறை அல்ல, பலமுறை தொடர்ச்சியாக அனுப்பப்படும். அவற்றில் கெட்டவார்த்தைகள் இருக்கலாம். அசிங்கமான புகைப்படங்கள் இருக்கலாம். மிரட்டல் இருக்கலாம். ஆனால் தொல்லை தரும் வகையில் தொடர்ந்து அனுப்பப்படும். பல சமயங்களில் உங்களின் அனுமதியின்றி அழைக்கவும் செய்வார்கள். தொடர்ச்சியாய் அழைப்பார்கள். நீங்கள் இருக்குமிடம் வீடோ, அலுவலகமோ அங்கு இருப்பவர்களே எரிச்சல் அடையும் வகையில் தொடர்ந்து நடந்துகொள்வார்கள். ஏதொவொரு தருணத்தில் கோபப்பட்டேனும் நீங்கள் அழைப்பை ஏற்க வேண்டும். அல்லது பதில் குறுந்தகவல் அனுப்ப வேண்டும். அப்படி செய்துவிட்டால் அதை வைத்துக் கொண்டு தொடர்ந்து உங்களிடம் தொடர்பு கொள்ள முயலுவார்கள்.

இரண்டாவது, கெட்ட வார்த்தைகள்

இந்த முறையில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி உங்களை பற்றி பொதுவெளியில் எழுதுவார்கள். அதை பிறருக்கு பரப்புவார்கள். உங்களின் அனுமதியின்றி உங்களின் சமூக தள பக்கத்திலேயே பகிர்வார்கள். அது பகிரப்பட்டது கூட உங்களுக்கு தெரியாது. ஆனால் உங்களின் நண்பர்களாக இருக்கும் பலருக்கு அந்த பதிவு கண்ணில் படும்.

மூன்றாவது, தனிமைபடுத்துதல்

குழுவாக இணையத்தில் இயங்குகையில் அக்குழுவை சேர்ந்த ஒருவரை வேண்டுமென்றே தனித்து விடுவது இம்முறை. குழுவில் அந்த நபரை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். குறிப்பிட்ட அந்த நபரை பற்றி தவறாக குழுக்குள் பேசிக் கொள்வார்கள். தனித்து விடப்படுவதே ஒரு கொடுமை என்றால், தன்னை பற்றி தவறாக பேசப்படுவதற்காகதான் தனித்து விடப் படுகிறோம் என தெரிகையில் மிகப் பெரிய மன உளைச்சலுக்கு நாம் ஆளாவோம். நம்மை பற்றி குழுவுக்குள் என்ன பேசுகிறார்கள் என தெரிந்து கொள்ள அல்லாடுவோம். குழுவை சேர்ந்த அனைவரிடமும் விசாரிப்போம். என்ன பேசினார்கள் என்பதை தெரிந்து கொள்ள நாம் செய்யும் முயற்சிகள் எல்லாமும் குழுவில் இருப்பவர்கள் நம்மை பற்றி இன்னும் அதிகமாக பேச வைக்கும். அது இன்னும் நமக்கு அகச்சிக்கல்களை அதிகமாக்கி தரும்.

நான்காவது, வெளிப்படுத்துதல்!

குறிப்பிட்ட ஒரு நபரை பற்றிய தகவல்களை வெளியிடுவது இம்முறையில் வரும். மொபைல் எண்கள், வங்கி தகவல்கள், வீட்டு முகவரி, அந்தரங்க விஷயங்கள், புகைப்படங்கள், காணொளிகள் என தனிப்பட்ட முறையில் கொடுத்த விஷயங்கள் சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியின்றி இணையத்தில் கசியவிடப் படும். அவை பலருக்கு பகிரப்படும். வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு தகவல்களுடன், வெவ்வேறு நபர்களால் கையாளப்படும் ஆபத்து இதனால் நேர்கிறது. உதாரணமாக இணையத்தில் அனுமதியின்றி பகிரப்படும் ஒரு மொபைல் எண்ணுக்கு பல்லாயிரம் பேர் தொடர்ந்து அழைக்கும் சூழல் நேர முடியும். அது அந்த நபரின் குடும்பம், வாழ்க்கை, வேலை என எல்லாவற்றையும் பல வழிகளில் பாதிக்கவும் முடியும்.

ஐந்தாவது, போலிகள்

உங்களின் பெயர்களில் போலிக் கணக்குகள் சமூகதளங்களில் துவங்கப்படும். உங்களின் உண்மையான கணக்கு தெரியாதவர்கள் போலியான கணக்கை பின் தொடர நேரலாம். அந்த போலிக் கணக்குகளில் தவறான விஷயங்கள் பதிவிடப்படுகையில் உங்களை பற்றிய மதிப்பு குறையும். இன்னும் ஒரு படி மேலே போய் உங்களின் பெயரில் துவங்கப்படும் போலி கணக்கிலிருந்து பிறருக்கு பேச அழைப்பு விடுக்கப்பட்டாலோ குறுந்தகவல்கள் அனுப்பினாலோ அதை நீங்கள்தான் அனுப்பியதாக அடுத்த நபர் நினைப்பார். அந்த அழைப்புகளும் குறுந்தகவல்களும் கொச்சையான காரணங்களுக்காக நிகழ்த்தப்பட்டிருந்தால் உங்களின் பெயர் கெட்டு போகும். பல நேரங்களில் சட்ட நடவடிக்கைக்கு கூட பாதிக்கப்பட்ட நபர் உங்களை கொண்டு போகும் நிலை வரலாம்.

ஐந்து முறைகளில் இணைய குற்றங்கள் நிகழ்த்தப்படலாம் என்றாலும் இந்த ஐந்து முறைகளுமே பல விதங்களாக உருமாற்றப்பட்டும் பல முறைகளாக மாற்றப்பட முடியும். உதாரணமாக சைபர் ஸ்டாக்கிங். அதாவது இணையத்தில் அனுமதியின்றி பின்தொடருதல் என மொழிபெயர்க்கலாம். பின்தொடருதல் என்றால் வெறுமனே பின்தொடர்வது அல்ல. ஒருவரின் பெயரில் போலிக் கணக்கு தொடங்கி அவரின் தகவல்களும் புகைப்படங்களும் அனுமதியின்றி வெளியிட்டு, தொடர் குறுந்தகவல்களாலும் அழைப்புகளாலும் அச்சுறுத்தப்படும் நிலைக்கு அந்த நபர் ஆளாக்கப்படுவார். இவை அனைத்தையும் சாத்தியப்படும் வாய்ப்பை இணையத்தின் சமூக தளங்கள் வழங்குகின்றன.

தொழில்நுட்பம் அதனளவில் நிச்சயமாக மோசம் கிடையாது. நிறுவனங்கள் அதிக லாபத்தை ஈட்டும் வழியாக, ஒரு விற்பனைப் பொருளாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது அது ஆபத்தான எல்லையை அடைகிறது. அதிக பயன்பாடை நிறுவனம் பெறுகையில் அதிக வருமானம் கிட்டுகிறது. எனவே அதிக பயன்பாட்டாளர்கள் கிடைக்கும் வண்ணம் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. அத்தகைய மேம்பாடு பெரும்பாலான நேரங்களில் எந்த வித நியாய, தர்ம கட்டுப்பாடுகளுக்கு உட்படாமலேயே இருக்கிறது. விளைவாக நாட்டின் அரசே கூப்பிட்டு விசாரித்தாலும் நிறுவனம் எளிதில் தப்பித்துக் கொள்ளவும் முடிகிறது.

Also Read: பறக்கும் தட்டுகளில் வருவது யார்? Nazca கோடுகள் ஏன் வந்தன? : மனிதர்களின் இக்கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?