Politics

“சமூகநீதி அரசியலின் நங்கூரமாக விளங்கியவர் கலைஞர்” : சட்டமன்ற நூற்றாண்டு விழா என்ற வரலாற்றுத் தருணம் !

இந்திய நிலப்பகுதியின் தொன்மையான வரலாறு அனைவரும் அறிந்ததே. அது காலனிய ஆட்சிக் காலத்தில் ஒரு தேசமாக, ஒற்றை அரசின் நிர்வாகத்துக்குக் கீழ் வருவதாக உருவெடுத்தது. அப்படி உருவான இந்தியாவில் முதன்முறையாக மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதும், அவர்கள் ஆட்சியில் பங்கேற்பதும் நிகழ்ந்த ஆண்டுதான் 1921. அந்த ஆட்சிக்கான தேர்தல்கள் 1920 ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றன.

சட்டமன்றங்கள் 1921 ஆண்டு கூடி செயல்படத் தொடங்கின. மக்களாட்சி என்ற தத்துவத்தின் முதல் இந்திய செயல்வடிவம் என்று இதைக் கூறலாம். அவ்வாறான தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அவை என்பது தமிழகத்தில் மட்டும் கூடவில்லை. இந்திய அளவிலான ஓர் அவையும், தமிழகம் தவிர மேலும் எட்டு மாகாணங்களில் அவைகளும் உருவாயின. ஆனால் தமிழக சட்டமன்றம் மட்டுமே தன் வரலாற்றுத் தொடர்ச்சியை உணர்ந்து நூற்றாண்டு விழா எடுக்கிறது. இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.

இரட்டை ஆட்சி முறை!

இந்தியா பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடி ஆட்சிக்குக் கீழ் 1858ஆம் ஆண்டு வந்தது. அதுவரை கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியாகவும், பிரிட்டிஷ் அரசின் மேற்பார்வையாகவும் இருந்த குழப்ப நிலைகள் தீர்ந்து நேரடியான பிரட்டிஷ் அரசின் ஆட்சிப் பிரதேசமாக இந்தியா மாறியது. இந்தியாவை ஆளும் பொறுப்பு பிரிட்டிஷ் வைசிராயிடம் இருந்தது. அவர் தனக்கான ஆலோசனை குழுக்களை நியமித்துக்கொள்வார். அப்போதே மாகாண அளவிலான ஆட்சிப் பொறுப்பு கவர்னர்களிடமும், அவர்களுடைய ஆலோசனை கவுன்சில்களிடமும் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், மாகாண ஆட்சிகளின் அதிகாரம் வைசிராயின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டது.

இந்த நிலையில், ஆட்சியின் மீதான அதிருப்தி தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பு தொடங்கப்பெற்று அது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தொடங்கியது. இந்தியர்களுக்கு சுயாட்சி உரிமை வேண்டும் என்றும், ஆட்சியில் இந்தியர்கள் பங்கெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன. அதன் விளைவாக மாண்டெகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்திய அரசமைப்பு சட்டமொன்று (Government of India Act) 1919ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதன்படி இந்தியாவில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மத்திய சட்டமன்ற அவையிலும், மாகாண சட்டமன்ற அவையிலும் பங்கெடுப்பார்கள் என்ற நடைமுறை அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்தச் சட்டம் தேசியவாதிகள் பலருக்கும் திருப்தியளிக்கவில்லை. காங்கிரஸ் ஒத்துழையாமை போராட்டத்தில் இருந்ததால் அந்தக் கட்சி தேர்தலிலோ, ஆட்சியிலோ பங்கேற்கவில்லை. நாம் அந்த தேர்தல்களின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அது இப்போதுள்ளது போல 18 வயதான அனைவரும் வாக்களிக்கும் உரிமை பெற்ற தேர்தல்கள் அல்ல. கணிசமான சொத்துகளை உடையவர்கள், கணிசமாக வரி செலுத்துபவர்கள், பட்டங்கள் பெற்றவர்கள், அரசு பதவிகளில் உள்ளவர்கள் என மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான ஆண்கள் மட்டுமே வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக இருந்தார்கள்.

ஆம். பெண்கள் வாக்களிக்கவோ, பிரதிநிதிகளாகவோ இயலாது. மேலும், சட்டமன்றத்துக்கும், மாகாண அரசுக்கும் சட்டமியற்றும், ஆட்சி செய்யும் அதிகாரங்கள் இருந்தாலும் எல்லாமே கவர்னரின், கவர்னர் ஜெனரலின் அதிகாரங்களுக்குக் கட்டுப்பட்டவைதாம். அவர்கள் நினைத்தால் எதையும் மாற்றலாம்; தீர்மானிக்கலாம். எனவே மக்கள் பிரதிநிதிகளின் உரிமைகள் என்பவை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருந்தன.

இதையெல்லாம் சிந்திக்கும்போது இரட்டை ஆட்சி முறையின் துவக்கம் உண்மையிலேயே இந்தியாவின் மக்களாட்சியின் துவக்கம்தானா என்ற கேள்வி எழுவது இயல்பு. பெரும்பாலும் வெகுஜன மனநிலையில் அவ்வாறான முக்கியத்துவம் பதிவாகவில்லையென்றும்கூட கூறலாம். ஆனால், எவ்வளவு மட்டுப்படுத்தப்பட்ட துவக்கமாக இருந்தாலும் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆட்சியில் பங்கெடுப்பது என்ற அளவில் சிந்தித்தால் அது ஒரு முக்கியமான துவக்கம் என்றே தோன்றும்.

அது தவிரவும் மற்றொரு முக்கியமான அம்சமும் இரட்டை ஆட்சி முறையில் அடங்கியுள்ளது. அதில் இந்தியர்களின் ஆட்சி பங்கேற்பு மட்டுமல்ல; மாகாணத்துக்கான சட்டம் இயற்றும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன. எந்தெந்த ஆட்சி / நிர்வாக அம்சங்கள் மாகாணங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும், எவையெல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதும் முதன்முறையாகப் பிரிக்கப்பட்டது. பலவீனமான துவக்கம் என்றாலும், கூட்டாட்சி தத்துவத்தின் துவக்கமும் அதுதான்.

தமிழக சட்டமன்றத்தின் தனித்துவம்!

தமிழகம் தவிர பிற இடங்களில் காங்கிரஸ் தேர்தலில் பங்கேற்காததால் காங்கிரஸிலிருந்து விலகிய தலைவர்கள், பிற செல்வாக்குமிக்க மனிதர்கள், பிரமுகர்கள் சுயேச்சையாக போட்டியிட்டும், சில தற்காலிக அமைப்புகளை உருவாக்கிப் போட்டியிட்டும் ஆட்சியில் பங்கெடுத்தார்கள். ஆனால், தமிழகத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தெளிவான ஒரு சித்தாந்தத்துடன் தன்னை வடிவமைத்துக்கொண்ட நீதிக்கட்சி என்ற ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தது. அது தென்னிந்திய நல உரிமைச் சங்கம், South Indian Liberal Federation என்ற பெயரில் பார்ப்பனரல்லாதோர் அறிக்கை, Non-Brahmin Manifesto என்பதை வெளியிட்டிருந்தது. அது பார்ப்பன சமூகத்தினரின் சமூக, அரசியல் ஆதிக்கத்தையும், பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்கத்தையும் கேள்விக்கு உட்படுத்தியது.

தேசியவாதிகளால் இது வகுப்புவாதம் எனவும், தேச ஒற்றுமைக்கு ஊறுவிளைவிப்பது என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் தேசியவாதிகள் சாதி அமைப்பும், தர்ம சாஸ்திர விதிமுறைகளும் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள கடுமையான ஏற்றத்தாழ்வுகளையும், பார்ப்பனர்களுக்கு கல்வியில், நிர்வாகத்தில் ஏற்படுத்திக்கொடுத்துள்ள பாரபட்சமான வசதிகளையும் விமர்சிக்க முன்வரவில்லை. வர்ணாஸ்ரம பரிபாலன சபைகள் வெளிப்படையாக சாதி வேறுபாட்டுக்கு நியாயம் கற்பிப்பதையும் தேசியவாதிகள் பலரும் எதிர்கொள்ளவில்லை. தேசியவாதிகளின் சீர்திருத்தம் என்பது பார்ப்பனர்களின் மனம் கோணாமல் மெள்ள மெள்ள சில சலுகைகளைப் பிறருக்குப் பெற்றுத்தருவதாகவே இருந்தது.

இந்த நிலையில் இந்தியாவிலேயே வேறெங்கும் காணப்படாத வகையில் தேசியவாதிகளின் இந்த பலவீனத்தை வெளிப்படையாக விமர்சித்து, பார்ப்பனரல்லாதோரின் அரசியல் நியாயத்தை, அவர்களுக்கான சமூக நீதியை உரக்க பேசியதுதான் நீதிக்கட்சி. அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் பெருவாரியாக வெற்றி பெற்று தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்றார்கள். அவர்களது முக்கிய கோரிக்கை என்பது கல்வியிலும், அரசு வேலைகளிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தேவை என்பதாகும். அதாவது அனைத்து வகுப்பினருக்கும் உரிய இடம் கிடைக்கும் வகையில் இட ஒதுக்கீடு செய்யப்படப்பட வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கை. அந்த வகையில் இட ஒதுக்கீடு என்ற சமூகநீதி கோரிக்கையின், மக்களாட்சி அடிப்படையின் தொடக்கப் புள்ளியாக நீதிக்கட்சியின் கொள்கைகள் விளங்கின.

இதன் விளைவாக தமிழக சட்டமன்றம், நீதிக்கட்சி அரசு 1921ஆம் ஆண்டே முதன்முறையாக கம்யூனல் ஜி.ஓ என்ற வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. இதை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தாலும், 1928ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தாலும், அதற்கான அச்சாரம் 1921ஆம் ஆண்டிலேயே இடப்பட்டுவிட்டது. பார்ப்பனரல்லாதோர் அறிக்கையை வெளியிட்ட நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்ததே அதற்கான அச்சாரம் என்றும் பார்க்கலாம். அதேபோல பெண்களுக்கு வாக்குரிமையும், பிரதிநிதியாகும் உரிமையும் உறுதி செய்யப்பட்டது. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி முதல் சட்டமன்ற பெண் உறுப்பினர் ஆனார்.

மக்களாட்சியும், இட ஒதுக்கீடும்!

மக்களாட்சி என்பதும், இட ஒதுக்கீடு என்பதும் சாராம்சத்தில் ஒரே லட்சியத்திலிருந்து கிளைப்பவை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அந்த லட்சியம் என்னவென்றால் அதிகாரப் பரவல். அதிகாரம் என்பது ஒரு சிறிய குழுவினரிடம், ஒரு வகுப்பாரிடம் குவிந்திருப்பது என்ற நிலையை மாற்றி, பரவலாக அதிகாரப் பரவலை சாத்தியமாக்குவதுதான் மக்களாட்சி. இந்தியாவில் பன்னெடுங்காலமாக நிலவிய சாதி ஏற்றத்தாழ்வால் ஏற்கனவே அதிகாரம், ஆதிக்க சாதிகளிடையே குவிக்கப்பட்டுவிட்டது.

அதனால் மக்களாட்சி என்ற லட்சியத்தை அடைய அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது மட்டுமே போதாது. தீவிரமான இட ஒதுக்கீட்டு நடைமுறைகள் மூலம் அனைத்து சாதியினருக்கும் கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் சம வாய்ப்புகளை உருவாக்காமல் ஒருபோதும் அதிகாரப் பரவலை சாத்தியமாக்க முடியாது. அதாவது தேர்தல்களும், வாக்குரிமையும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் இட ஒதுக்கீடு.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தீண்டாமை கொடுமைகளை அனுபவித்த பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு அமைப்புகளில். நிறுவனங்களில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டாலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு என்பது 1990ஆம் ஆண்டுதான் சாத்தியமாகியது. வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று சட்டமாக்கியதன் மூலமாகத்தான் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பது தேசிய அளவில் சாத்தியாகியது.

ஆனால், தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக சமூக நீதி கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தொடர்ந்து விளங்கி வந்துள்ளது. அதற்கான ஒரு துவக்கப்புள்ளிதான் 1921ஆம் ஆண்டு அமைந்த சட்டமன்றமும், நீதிக்கட்சி ஆட்சியும். அதன் நூற்றாண்டு விழாவைத் தமிழகம் கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது என்பதில் ஐயம் இருக்க முடியாது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்துக்கும் இல்லாத நூறாண்டு அரசியல் வரலாற்றுத் தொடர்ச்சி தமிழகத்துக்கு அமைந்துள்ளதே இந்த விழாவுக்கு காரணம்.

கலைஞர் என்ற வரலாற்று நாயகர்!

தமிழக சட்டமன்றத்தின் நூறாண்டுகளில் அறுபதாண்டுக் காலம் அதில் இடையறாது பங்கேற்றவர் கலைஞர் மு.கருணாநிதி. 1957ஆம் ஆண்டு குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் வென்று சட்டமன்றத்தில் நுழைந்த அவர் அதன் பிறகு நடந்த எந்த தேர்தலிலும் தோல்வியைச் சந்திக்கவில்லை. அது மட்டும் அவர் பெருமையல்ல. நீதிக்கட்சி எந்த அதிகாரப் பரவலைக் கொள்கையாகக் கொண்டு தொடங்கப்பட்டதோ, அந்த சமூக நீதிப் பார்வையை தமிழக அரசியலின் பொதுப்புத்தியாக மாற்றியதில் அளப்பெரும் பங்காற்றியவர் கலைஞர் என்றால் மிகையாகாது.

நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பல வடிவங்கள் கொண்ட பார்ப்பரனரல்லாதோர் சமூக நீதி அரசியல் வரலாற்றினை தமிழகத்தில் நிலைகொள்ளச் செய்த பெரியாரும், அண்ணாவும் அடுத்தடுத்து 69ஆம் ஆண்டும், 73ஆம் ஆண்டும் மறைந்த பிறகு, அரை நூற்றாண்டுக் காலம் சமூக நீதி அரசியலின் நங்கூரமாக விளங்கியவர் கலைஞர்.

அதனால் சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவில் அவருடைய திருவுருவப் படத்தைச் சட்டமன்றத்தில் திறந்துவைப்பது என்பது சாலப் பொருத்தமானது. அதிலும் இந்தியக் குடியரசுத் தலைவர் அதைத் திறந்துவைப்பது இது தமிழகத்தின் தனி வரலாறல்ல, இந்திய வரலாற்றின் தவிர்க்க முடியாத தனித்துவமான அங்கம் என்பதையும் உணர்த்துவதாக உள்ளது.

குடியரசுத் தலைவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓவியர் மனோஹர் தேவதாஸின் “Multiple Facets of My Madurai” என்ற நூலைப் பரிசளித்துவிட்டு வந்தார். அவரை சட்டமன்றத்தின் சார்பாக அழைக்கச் சென்ற சபாநாயகர் அப்பாவு பொருளாதார ஆய்வாளர்கள் கலையரசனும், விஜய்பாஸ்கரும் எழுதிய “The Dravidian Model” என்ற நூலைப் பரிசளித்துள்ளார். தமிழ் பண்பாடும், சமூக நீதி அரசியலும் பிரிக்க முடியாதவை என்பதை இந்த இரண்டு நூல்களின் தேர்வும் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம். நூறாண்டுகள் காணும் தமிழக சட்டமன்றத்திற்கும், மக்களாட்சிக்கும் வாழ்த்துகள்!

- ராஜன் குறை கிருஷ்ணன்., பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.

நன்றி: மின்னம்பலம் இணையதளம்.

Also Read: “சட்டமன்றத்தில் கலைஞரின் திருவுருவப்படம் திறப்பு விழாவை காலம் என்றென்றும் மறக்காது”: தினத்தந்தி புகழாரம்