Politics

ஐகோர்ட்டை இழிவுபடுத்திய H.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்? - ஐகோர்ட் கிளை எச்சரிக்கை!

உயர் நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில் முன்னாள் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீதான வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வது தொடர்பான உத்தரவை ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 2018ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின்போது மேடை அமைத்து பேசுவதற்கு காவல் துறை அனுமதி மறுத்தது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா காவல் துறையைக் கண்டித்ததுடன், நீதிமன்றத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் இழிவான சொற்களில் விமர்சித்தார்.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அங்கு பதிவான வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

ஹெச். ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் அவ்வழக்கு முடித்துவைக்கப்பட்டது. இந்நிலையில் திருமயம் காவல் நிலையம் விசாரித்த வழக்கில், விசாரணையை முடித்து விரைவில் ஹெச். ராஜா மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2 மாதத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது வரை அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆகவே தொடர்புடைய அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல்செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமலதா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பான உத்தரவை ஏப்ரல் 27ஆம் தேதிக்குள்ளாக நிறைவேற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: சாரணர் தேர்தலில் தோல்வி, போலிஸை திட்டி மன்னிப்பு என வரலாற்றில் எச்.ராஜாவின் க்ரைம் ரேட் கூடிய நாள் இன்று!