Politics

“புதுவையிலும் அரசியல் தில்லுமுல்லை காட்டிய பாஜக.. இது ஜனநாயக சீரழிவு” - தமிமுன் அன்சாரி கடும் கண்டனம்!

புதுச்சேரியில் நடைபெற்றது ஒரு ஜனநாயக சீரழிவு எனக் குறிப்பிட்டு ம.ஜ.க பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது அறிக்கையில், “புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் நோக்கோடு நடைபெற்று வந்த சூழ்ச்சிகளின் நிறைவாக, முதல்வராக பதவி வகித்த நாராயணசாமி இன்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது அரசு பெரும்பான்மையை நிருபிக்க முடியாது என தெரிந்திருந்தும், அவர் தைரியமாக பேரவையை சந்தித்து; அங்கே தனது அரசுக்கு எதிராக மத்திய அரசின் துணையோடு நடைபெற்று வந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை ஆதாரத்துடன் எடுத்துக் கூறி, அவற்றை வரலாற்று பதிவாக்கியிருக்கிறார்.

Also Read: “புதுவை ஜனநாயக படுகொலையை எதிர்த்து திமுக காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்” - மு.க.ஸ்டாலின்

ஆளுங்கட்சி MLA-க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த போதே அங்கு கொல்லைப்புற வழியாக ஆட்சி கவிழ்ப்பு நடைபெற போகிறது என்பதை மக்கள் யூகிக்க தொடங்கினர். அது இன்று நடந்திருக்கிறது. இது பெரும் ஜனநாயக சீரழிவாகும்.

சமீப வருடங்களாக மத்தியில் உள்ள தங்களின் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி நாடெங்கிலும் நடத்தி வரும் அரசியல் தில்லு முல்லுகளை, பாஜக இங்கும் நிறைவேற்றியிருக்கிறது.

இது நாள் வரை மத்திய அரசு, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோரின் நெருக்கடிகளை சமாளித்து திறன் பட ஆட்சி நிர்வாகத்தை வழிநடத்திய நாராயணசாமி அவர்களின் சாதுர்யம் பாராட்டத்தக்கது.

மக்கள் தேர்வு செய்த ஒரு அரசை கவிழ்த்தவர்களுக்கு அடுத்து வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை. புதுச்சேரி மக்கள் ஜனநாயக கோட்பாடுகளை காப்பாற்ற ஓரணியில் திரள வேண்டியது அவசியம் என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக் காட்டுகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: "புதுச்சேரி கவர்னர் மாளிகையின் ஆண்டுச் செலவு இவ்வளவா?" - ஆர்.டி.ஐ., மூலம் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!