இந்தியா

"புதுச்சேரி கவர்னர் மாளிகையின் ஆண்டுச் செலவு இவ்வளவா?" - ஆர்.டி.ஐ., மூலம் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

புதுச்சேரி கவர்னர் மாளிகையின் ஆண்டுச் செலவு பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது எனும் அதிர்ச்சித் தகவல், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வெளிவந்துள்ளது.

"புதுச்சேரி கவர்னர் மாளிகையின் ஆண்டுச் செலவு இவ்வளவா?" - ஆர்.டி.ஐ., மூலம் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp

புதுச்சேரியில் அரசுப் பணத்தில் கவர்னர் கிரண்பேடி வீண் செலவு செய்கிறார் என சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கவர்னர் மாளிகையில் 10 ஆண்டு செலவினங்களைப் பெற்று வெளியிட உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அதன்படி தற்போது அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் 2010 முதல் 2020 வரை கவர்னர் மாளிகை செலவின தகவல்களை பெற்று வெளியிட்டுள்ளார்.

அதன்விவரம் வருமாறு:

புதுச்சேரி கவர்னராக கிரண்பேடி 2016ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். 2016-17ல் பட்ஜெட்டில் கவர்னர் மாளிகைக்கு ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டது. திருத்திய மதிப்பீட்டில் ரூ.4 கோடியே 42 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ரூ.4 கோடியே ஏழரை லட்சத்தை கவர்னர் மாளிகை செலவு செய்துள்ளது.

2017-18 பட்ஜெட்டில் ரூ.4 கோடியே 42 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. திருத்திய மதிப்பீட்டில் ரூ.4 கோடியே 90 லட்சமாக உயர்த்தப்பட்டு ரூ.4 கோடியே 87 லட்சமும், 2018-19ல் பட்ஜெட்டில் ரூ.5 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, திருத்திய மதிப்பீட்டில் ரூ.6 கோடியே 5 லட்சமாக உயர்த்தப்பட்டு, ரூ.6 கோடியே 4 லட்சமும், 2019-20ல் பட்ஜெட்டில் ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.6 கோடியே 20 லட்சமும் செலவு செய்யப்பட்டுள்ளது.

2010-11ல் ரூ.3 கோடியாக இருந்த கவர்னர் மாளிகை செலவு 10 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது. இவ்வாறு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல் தெரிவிக்கிறது.

"புதுச்சேரி கவர்னர் மாளிகையின் ஆண்டுச் செலவு இவ்வளவா?" - ஆர்.டி.ஐ., மூலம் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

மேலும், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறுகையில், “தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பரிசோதனை நடத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். அங்கு பரிசோதனைக் கட்டணம், சிகிச்சைக் கட்டணம் நிர்ணயிக்கப்படும். தனியார் மருத்துவக்கல்லூரி படுக்கைகளை பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை இணைந்து 85 நாட்களாக இரவு, பகலாகப் பணியாற்றி வருகிறது. அனைவரும் ஒன்றிணைந்து பேசி முடிவுகளை எடுத்து வருகிறோம். ஆனால் கவர்னர் கிரண்பேடி சமீபநாட்களாக தன்னிச்சையாக கொரோனா பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

கடந்த 70 நாட்களாக கவர்னர் தூங்கிவிட்டார். தற்போது விழித்துக்கொண்டு அதிகாலையில் செயலர்கள், அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவை பிறப்பிக்கிறார். இதனால் அதிகாரிகள் குழம்புகின்றனர். மீனவர்களின் வீடுகளுக்குச் சென்று ரேஷன்கார்டுகளை ஆய்வு செய்ய கவர்னர் உத்தரவு போட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கவர்னர் கிரண்பேடிக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உண்மையில் அக்கறை இருந்தால் புதுச்சேரி அரசு நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். காலையில் வாட்ஸ்அப்பில் பேசி உத்தரவு பிறப்பிப்பதால் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது" என்றார்.

banner

Related Stories

Related Stories