Politics

எரிவாயு விலை உயர்வு: மக்களின் கோபக்கனல் தேர்தலில் வெளிப்படும் - மோடி அரசை தாக்கி ‘தினகரன்’ தலையங்கம்!

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் கோபக்கனலில் வருகிற தேர்தலில் பதில் சொல்வார்கள் என்று நேற்று ‘தினகரன்’ நாளிதழ் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து தினகரன் நேற்று (17.2.2021) ‘கோபக்கனல்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள தலையங்கம் வருமாறு :-

“முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சாமானிய மக்கள், உழைக்கும் வர்க்கத்தினர் மீதான தாக்குதலை தொடர்ந்து, துணிந்து செய்துக்கொண்டு இருக்கிறது மத்திய அரசு. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வின் மூலம் நடுத்தர வர்க்க மக்களையும் நிலைகுலைய வைக்கும் பணி நடந்து வருகிறது. எதற்கும், யாருக்கும் கவலைப்படாமல் துணிந்து விலைச்சுமையை மக்கள் மீது திணிக்கப்பட்டு வருகிறது.

திணறி, திண்டாடி வாய் பேச முடியாமல் தவித்த நிலையில் மக்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு ஜூன் மாதத்தில் ரூ.37, ஜூலை மாதத்தில் ரூ.4, டிசம்பர் மாதத்தில் ரூ.100, பிப்ரவரி மாதத்தில் இதுவரை ரூ.75 என சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.215.50 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.91.44, டீசல் ஒரு லிட்டர் ரூ.84.75க்கு விற்கப்படுகிறது. இது நேற்றைய விலைதான். இன்று? இந்த விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் சுமை. பெட்ரோல், டீசல் விலை உயரும் போது அனைத்து வகையான பொருட்களின் விலையும் உயரும்.

வாடகை வாகனங்கள், பஸ் கட்டணங்கள், மின் கட்டணங்கள் என அன்றாடம் மக்கள் தேவைக்கு உட்பட்ட அனைத்தும் விலையும், கட்டணங்களும் உச்சத்தை எட்டும். இது வாடிக்கை. இப்போது பெட்ரோல், டீசல் விலையே உச்சத்தில் இருக்கும் போது மற்ற பொருட்களின் விலை எப்படி கட்டுக்குள் நிற்கும்? சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் அப்படித்தான். ஒவ்வொரு இல்லத்தையும் நேரடியாக பாதிக்கின்ற ஒரு விலை உயர்வு இது. தமிழகத்தில் மட்டும் 2.38 கோடி சமையல் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வழக்கமாக மானிய விலை சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயரும் போது அது மக்கள் மீது சுமத்தப்படாது.

விலை உயர்வுக்கு இணையாக மத்திய அரசின் மானியம் உயர்த்தப்படும். 2019ம் ஆண்டு மே மாதம் சமையல் கேஸ் சிலிண்டர் அடிப்படை விலை ரூ.484.02 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. சமையல் எரிவாயு விலையை அதற்கும் கூடுதலாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தினால், அந்தத் தொகையை மத்திய அரசு மானியமாக வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியது. ஆனால் இப்போது மத்திய அரசு, மானியத்தை நிறுத்தி விட்டது. கடந்த 8 மாதங்களில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.215.50 உயர்ந்துள்ள நிலையில், மானியம் ரூ.300.48 வழங்க வேண்டிய இடத்தில் ரூ.24.95 மட்டுமே வழங்கி வருகிறது. அதுவும் எல்லோருக்கும் வருவதில்லை என்பது இன்னும் சோகம்.

கொரோனாவால் வேலை இழப்பு, பொருளாதார சிக்கல், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, வரி உயர்வால் மக்கள் கொடுமையை அனுபவித்து வருகிறார்கள். அவர்களின் கோபக்கனல் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதை குறைப்பது, தடுப்பது ஆட்சியாளர்களின் கடமை. இல்லாவிட்டால் தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள்.”

இவ்வாறு ‘தினகரன்’ தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

Also Read: “தமிழக அரசு பணியில் வடமாநிலத்தவர்கள் ஆதிக்கம்: ஒன்றுப்பட்டு தடுப்பதே நம் கடமை” - தினகரன் தலையங்கம்!