கோப்புப்படம்
Politics

திமுகவின் ‘மக்கள் கிராம சபை’ கூட்டத்தை தடுக்க எத்தனை வழக்குகளை தொடுத்தாலும் சந்திக்கத்தயார் - டி.ஆர்.பாலு

ஊராட்சி தலைவருக்கு காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் இருந்தது அதை பறித்துவிட்டு மாவட்ட ஆட்சியரே டெண்டர் விடும் முறையை கொண்டுவந்துள்ளனர், இதனால் அங்கேயே ஊழல் நடைபெறுகிறது. ஊழல் நாடாக தமிழகம் மாறியுள்ளதற்கு இது ஒன்றே சாட்சி என்று தி.மு.கழக பொருளாளர் டி.ஆர்.பாலு அதிமுக அரசை சாடியுள்ளார்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் புலிகொரடு மற்றும் சேலையூர் ஆகிய இரண்டு பகுதிகளில் ‘அதிமுக அரசை நிராகரிக்கிறோம்’ என்ற வாசகத்தை முன்னிறுத்தி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் மக்கள் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழக பொருளாளரும், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான டி.ஆர்.பாலு மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துக்கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

அப்போது குடிநீர் வசதி, கிடப்பில் போடப்பட்ட பாதாளசாக்கடை திட்டபணியை விரைந்து முடித்தல், வேலை வாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, ரேசன் கார்டு, பேருந்து வசதி, சாலைகளில் நடந்து செல்லும் பெண்களிடம் கொள்ளை நடப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பு போன்ற அடிப்படை தேவைகளை புகாராக தெரிவித்தனர். இதனையடுத்து பேசிய திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு இன்னும் 4 மாதங்களில் திமுக ஆட்சி அமைந்ததும் பொது மக்களின் குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களின் ஊழல்களை பட்டியலிட்டார். அப்போது தாம்பரம் நகராட்சி முன்னாள் துணை தலைவர் காமராஜ், நகர பொருளாளர் இந்திரன், வட்ட செயலாளர் கொடி தாமோதரன் ஆகியோர் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Also Read: “திமுகவின் கிராம சபை கூட்டத்துக்கு தடை விதித்தது தோல்வி பயமே காரணம்” - எடப்பாடி அரசை சாடிய வேல்முருகன்!

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு:-

“தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் இடங்களில் ‘மக்கள் கிராம சபை’ நடைபெறும். அதனை தடுக்க ஆளும் கட்சியினர் எத்தனை வழக்குகளை தொடுத்தாலும் சந்திக்க திமுக தயாராக உள்ளது. மக்கள் கிராமசபை கூட்டத்தில் அதிமுக ஊழலை ஆதாரத்துடன் வெளிப்படுத்துகிறோம். அதனை மக்கள் அதிர்ச்சியுடன் கவனிக்கிறார்கள். மேலும் அக்கம் பக்கதினருடன் அவர்களே தெரிவித்து அதிமுக ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைப்பார்கள்

மக்கள் கிராமசபை கூட்டத்தில் ‘அதிமுகவை’ என கூறும் போதே ‘நிராகரிக்கிறோம்’ என மக்கள் குரல் எழுப்புகிறார்கள். திமுகவை ஆதரிக்கும் விதமாக ஐந்து விரல்களை விரித்து உதயசூரியன் சின்னதை தெரிவிக்கும் வகையில் திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் எனக் கூறினார்.

Also Read: “பழனிசாமி அல்ல, மோடியே வந்தாலும் தி.மு.க நடத்தும் மக்கள் சபை கூட்டங்களை தடுக்க முடியாது” : மு.க.ஸ்டாலின்