Politics

“எது ஊழல் கட்சி? நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?” - எடப்பாடி பழனிசாமிக்கு ஆ.ராசா MP சவால்!

“அ.தி.மு.க ஊழல் கட்சியா அல்லது தி.மு.க ஊழல் கட்சியா என்பதை நேருக்கு நேர் என்னுடன் விவாதிக்க முதல்வர் தயாரா?” என எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., சவால் விடுத்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க ஊழல் கட்சி என விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும்வண்ணம் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி மற்றும் என்.ஆர்.இளங்கோ எம்.பி ஆகியோர் சற்றுமுன்னர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., பேசுகையில், “தி.மு.க மீது எம்.ஜி.ஆராலேயே நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுக்களை எடப்பாடி பழனிசாமி இன்னும் தி.மு.க மீது வைத்துக்கொண்டிருக்கிறார். முதல்வர் மூன்றாம் தர மனிதரைப் போல பொறுப்பின்றி நடந்துகொண்டு இருக்கிறார்.

சசிகலா காலைத் தொட்டுத் தவழ்ந்து முதல்வரான எடப்பாடி பழனிசாமி பல்வேறு அவதூறுகளைச் சுமத்தியிருக்கிறார். 2ஜி உட்பட தி.மு.க மீதான குற்றச்சாட்டு குறித்து கோட்டையில் வைத்து நேருக்கு நேர் என்னுடன் விவாதிக்க முதல்வர் தயாரா?

உச்சநீதிமன்றத்தால் மன்னிக்கமுடியாத கொள்ளைக்காரி எனக் குறிப்பிடப்பட்டவர் ஜெயலலிதா. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தி.மு.க மீது எடப்பாடி பழனிசாமி ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவது மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சிலை அல்ல மலத்தை கொட்டிக்கொள்வதற்கு சமம்.

பகிரங்கமாக சவால் விடுகிறேன். அ.தி.மு.க ஊழல் கட்சியா அல்லது தி.மு.க ஊழல் கட்சியா என்பதை என்னுடன் விவாதிக்கத் தயாரா? மொத்த அமைச்சரவையையும் கூட்டுங்கள். அட்டர்னி ஜெனரலையும் அருகில் வைத்துக் கொள்ளுங்கள். கோட்டையில் நேருக்கு நேர் என்னுடன் விவாதிக்கத் தயாரா?

எடப்பாடியின் ஊழல்கள் தொடர்பாக தி.மு.க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கான பூர்வமான காரணங்கள் உள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2ஜி வழக்கில் 7 ஆண்டுகாலம் மேல்முறையீடு செல்லாமல் நானே சாட்சிக்கூண்டில் ஏறி பதில் கூறியுள்ளேன். ஜெயலலிதா தன் மீதான ஊழல் வழக்கை 20 வருடங்கள் இழுத்தடித்தார்.

எடப்பாடி பழனிசாமி செய்த ஊழல் வழக்கை விசாரிக்கை உச்சநீதிமன்றத்தில் அவர் தடை வாங்கி உள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் அந்த தடை உத்தரவை விலக்க செய்து விசாரணைக்கு ஆஜராக தயாரா?

நீங்கள் காலில் விழுந்து பதவிபெற்ற ஜெயலலிதாவும், சசிகலாவும் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகள். நீங்கள் ஆதாரமின்றி தி.மு.க-வை குறை சொல்வது ஏற்புடையதல்ல. தி.முக பற்றி அவதூறாகப் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். மனதிடம் இருந்தால் நேருக்கு நேர் விவாதிக்க கோட்டைக்கு அழையுங்கள்!

வேளாண் சட்டங்களில் எந்த தவறும் இல்லை என்கிறார் முதல்வர். எடப்பாடி பழனிசாமி உண்மையான விவசாயியாக இருப்பாரேயானால் அவருக்கு வேளாண் சட்டங்கள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். மத்திய அரசின் கைக்கூலியாக செயல்பட்டே, முதல்வர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “இடைத்தரகர்களின் தூண்டுதலால்தான் டெல்லியில் போராட்டம் நடக்கிறது” - விவசாயிகளை கொச்சைப்படுத்தும் எடப்பாடி!