Politics

“ஜெ.-வுக்கு 40 அமித்ஷாவுக்கு 60” : ஆள் மாறினாலும் அடிமை மனப்பான்மையை மாற்றிக்கொள்ளாத ஓ.பி.எஸ்!

இரண்டு நாள் அரசு முறைப் பயணம் என்ற பெயரில் அரசியல் காரணங்களுக்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றனர்.

பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடரும் என்று அறிவித்ததோடு, "நவீன காலத்தின் சாணக்கியர் அமித்ஷா" என்றும் பலமாகத் துதிபாடினார்.

தனது பதவிக்காகவும், தனது மகனுக்கு அமைச்சர் பதவி கோரியும் பா.ஜ.க மேலிடத்தை வளைந்து வணங்கி வரும் ஓ.பன்னீர்செல்வம், நேற்று விழா மேடையில் அமித்ஷாவுக்கு 60 டிகிரி கோணத்தில் குனிந்து வணக்கம் சொல்லி, மிகுதியான பவ்யம் காட்டியது பொதுமக்கள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

ஜெயலலிதா காலில் விழுந்து பதவி பெற்ற ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ள அ.தி.மு.க-வினர் தங்கள் பதவிக்காக யார் காலையும் பிடிப்பார்கள், எவர் காலையும் வாரிவிடுவார்கள் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் விமர்சிப்பதை அவ்வப்போது அ.தி.மு.க-வினர் மெய்ப்பித்து வருகிறார்கள்.

அமித்ஷாவுக்கு வளைந்து வணக்கம் சொன்ன ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் மீம்களில் ட்ரெண்டாகி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 40 டிகிரி கோணத்தில் வளைந்து வணக்கம் வைத்த ஓ.பி.எஸ், அமித்ஷாவுக்கு 60 டிகிரி கோணத்தில் வளைந்து வணக்கம் வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர்.

Also Read: “தூங்கும் அரசை எழுப்பும் தி.மு.க-வின் போர்க்குரல்”: உடன்பிறப்புகளுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்!