Politics
சட்டத்துக்கு மேலானவரா சூரப்பா? அவரை சஸ்பென்ட் செய்யாதது ஏன்? - அரசுக்கும் ஆளுநருக்கும் முத்தரசன் கேள்வி!
ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. உயர்கல்வித் துறையின் விசாரணையில் ரூ.280 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் ஆசிரியர் நியமனத்தில் மட்டும் ரூ.80 கோடி கையூட்டு கைமாறியிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சூரப்பாவை துணை வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என கல்வியாளர்களும், எதிர்கட்சிகளும், தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் ஆளும் தரப்பினர் மௌனம் காத்தும், அவரை ஆதரித்தும் வந்தனர்.
இப்போது நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைத்து, சூரப்பா மீதான குற்றச்சாட்டுள் விசாரிக்கப்படும் என அறிவித்தப்பட்டுள்ளது. இது தாமதமான முடிவு என்றாலும் விசாரணை நேர்மையாக நடப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
குற்றச்சாட்டுக்கு ஆளான சூரப்பா நேர்மையிருந்தால் துணை வேந்தர் பொறுப்பிலிருந்து விலகி விசாரணையை சந்திக்க வேண்டும். அவரிடம் அதனை எதிர்பார்க்க முடியாத நிலையில் அவரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும்.
சூரப்பாவை தற்காலிக பணிநீக்கம் செய்யாமல், அவர் துணைவேந்தர் என்ற நிலையிலிருந்தே விசாரணையை சந்திக்க அனுமதித்தால் அது கேலிக்கூத்தாகவும், நடந்து போன ஊழல்களை மூடிமறைக்கும் முயற்சியாகவே முடியும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.
எனவே நீதிபதி பி.கலையரசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையும், அதன் மீதான அரசின் நடவடிக்கையும் முடிவாகும் காலம் வரையிலும் சூரப்பாவை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசையும், ஆளுநரையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !
-
"ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்"- இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை !