Politics

“மோடி-எடப்பாடியின் வெற்று அறிவிப்பால் அழிவுநிலைக்கு தள்ளப்பட்ட கரும்பு விவசாயம்” - தமிழக காங்கிரஸ் சாடல்!

தமிழகத்தில் கரும்பு விவசாயம் அழிவுநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

அதில், “இந்தியாவிலேயே சர்க்கரை உற்பத்தியில் நான்காவது இடத்திலிருந்த தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கை முடிவு காரணமாக இன்றைக்கு கரும்பு விவசாயமே அழிந்து விடுகிற நிலை ஏற்பட்டுள்ளது. 2020 - 21ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைவை பருவத்திற்கான நியாயமான மற்றும் ஆதாய விலையாக 10 சதவிகிதம் பிழிதிறனுக்கு 1 டன் கரும்புக்கு ரூபாய் 2,850 எனவும், 9 சதவிகிதம் பிழிதிறனுக்கு டன்னுக்கு ரூபாய் 2707.50 எனவும் கரும்புக்கான விலையை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இது விவசாயிகளிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு, உற்பத்திச் செலவோடு அதில் 50 சதவிகிதம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை செய்திருக்கிறது. இதை நிறைவேற்றப் போவதாக கூறிய பா.ஜ.க. அரசு, அதை முற்றிலும் புறக்கணித்து விட்டு கரும்புக்கு விலை நிர்ணயம் செய்திருக்கிறது.

சர்க்கரை பிழிதிறன் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வதால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018 - 19 இல் கரும்பு பிழிதிறன் 10 சதவிகிதம் என்ற அடிப்படையில் மத்திய அரசு விலையை அறிவித்தது. ஆனால், தமிழ்நாட்டில் சராசரி கரும்பு பிழிதிறன் 9 சதவிகிதத்திற்கு கீழாக இருக்கும் நிலையில், மத்திய அரசின் விலை அறிவிப்பால் கரும்பு விவசாயிகளுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை.

தற்போது 1 டன் கரும்புக்கு அதே 10 சதவிகிதம் பிழிதிறன் அடிப்படையில் ரூபாய் 2,850 என்ற அடிப்படையில் தமிழகத்தில் 8.5 சதவிகிதம் பிழிதிறன் உள்ள நிலையில் ரூபாய் 2,850 க்கு பதிலாக ரூபாய் 2,700 தான் கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்கும். மத்திய அரசின் அறிவிப்பை பொறுத்தவரை தமிழக விவசாயிகள் 1 டன் கரும்புக்கு ரூபாய் 150 விலை குறைவாகவே பெற வேண்டிய நிலையிருக்கிறது. இதை சரிகட்டுவதற்காகத்தான் , மத்திய அரசின் விலையோடு 1 டன் கரும்புக்கு ரூபாய் 450 வரை பரிந்துரை விலையை அறிவித்து தமிழக அரசு வழங்கி வந்தது.

கடந்த 2 ஆண்டுகளாக மாநில அரசு பரிந்துரை விலையை வழங்காமல் மறுத்து வருகிறது. மத்திய அரசின் விலையுடன் மாநில அரசின் பரிந்துரை விலையையும் சேர்த்து பெற்று வந்த தமிழக கரும்பு விவசாயிகள் கடந்த 2 வருடங்களாக மத்திய அரசின் விலையை விட குறைவாக பெற்று வருகின்றனர். தற்போது கரும்பு வெட்டுக் கூலி, போக்குவரத்துக் கட்டணம், உர விலை ஆகியவை கடுமையாக இருப்பதால் உற்பத்தி செலவு பல மடங்கு கூடிவிட்டது. இதை ஒரு பொருட்டாக மத்திய, மாநில அரசுகள் கருதவில்லை.

2011 - 12 இல் தமிழகத்தில் 3.35 லட்சம் ஹெக்டரில் கரும்பு சாகுபடி செய்த நிலையிருந்தது. ஆனால், கரும்பு சாகுபடி பரப்பு 2019 - 20 இல் 1 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகள் கரும்பு சாகுபடிக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையை வழங்காமல் இருப்பதுதான். தன்னிச்சையாக எவரையும் கலந்தாலோசிக்காமல் கரும்புக்கான விலையை அறிவித்திருப்பதை தமிழக கரும்பு விவசாயிகள் எவரும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

Also Read: “கல்வித்துறையை காவி மயமாக்குகிறது மோடி அரசு” - பல்கலை.,-ல் பாஜக நிர்வாகி நியமனத்துக்கு திமுக MLA கண்டனம்!

அதே போல, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், 'கரும்பு உற்பத்தி 475.5 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 1,000 லட்சம் மெட்ரிக் டன் ஆக உயர்த்தப்படும்' என்று அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால் அம்மாவின் வழியில் ஆட்சி செய்வதாக கூறுகிற எடப்பாடி அரசு கரும்புக்கு பரிந்துரை விலையாக ரூபாய் 450 வழங்குவதற்கு மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கரும்பு விவசாயமே கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. 18 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் 5 ஆலைகளும், அதேபோல, 25 தனியார் சர்க்கரை ஆலைகளில் 13 மூடப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் கரும்பு சாகுபடி பரப்பு கடுமையாக குறைந்து, நஷ்டத்தை சந்தித்து வருவதும்தான்.

எனவே, டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி, மத்திய அரசு நியாயமான மற்றும் ஆதாய விலையாக 9 சதவிகித பிழிதிறன் கொண்ட 1 டன் கரும்புக்கு கொடுக்கிற விலையோடு, மாநில அரசின் பரிந்துரை விலையையும் சேர்த்து ரூபாய் 4,500 விலை வழங்க வேண்டுமென கரும்பு விவசாயிகள் கோரி வருகிறார்கள். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு ஆலைகள் தரவேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 3 ஆயிரம் கோடிக்கு மேல் பாக்கியுள்ளது. இதைப் பெற்றுத் தருவதற்கு தமிழக அரசு, கரும்பு ஆலைகள் மற்றும் விவசாயிகள் அடங்கிய முத்தரப்பினரையும் அழைத்து பேசி, உடனடியாக தீர்வு காண வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: LIC, BPCL நிறுவன பங்குகளை விற்கத் திட்டமிடும் மோடி அரசு - “வெட்கக்கேடான முயற்சி” என ராகுல் காந்தி சாடல்!