Politics

“அடிமைகளின் கொள்ளைவெறி உயிர்காக்கும் மாஸ்கிலும் தொடருவது பெரும் துரோகம்” - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

கொரோனா பரவலை தடுப்பதற்கு முகக்கவசம் அணிந்து, சமூக பரவலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் இந்தியாவிலும், தமிழகத்திலும் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறையாத வண்ணம் உள்ளது.

இதனால் கொரோனா வைரஸ் மேன்மேலும் பரவுவதை தடுக்க மக்கள் அனைவரும் மாஸ்க் அணியும் வழக்கத்தை ஏற்படுத்துவதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக தலா 2 மாஸ்க்குகள் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

முதற்கட்டமாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் உள்ள 4 கோடியே 44 லட்சம் மாஸ்க்குகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த மாஸ்க் வழங்கும் பணியை மேற்கொள்ள முடியாமல் வருவாய்த்துறை திணறி வருகிறது.

ஏனெனில், முன்னணி நிறுவனங்கள் இந்த மாஸ்க் டெண்டரில் பங்கேற்காததால் அனுபவமில்லாத போலி நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்கியுள்ளது தமிழக அரசு. இதனால், பொதுமக்களுக்கு தரமற்ற முகக்கவசங்களே வழங்கப்பட்டிருக்கின்றன. அதனால் எவ்வித பயனும் இல்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளன.

மேலும் இந்த மாஸ்க் டெண்டரில் பல கோடிகளுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு அரசு அதிகாரிகளும், ஆளுங்கட்சி அரசியல்வாதிகளும் பின்புலத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பான செய்தியை பகிர்ந்த தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “இல்லாத நிறுவனத்தை உருவாக்கி டென்டர் விட்டதால் ரேஷன் கடைக்கு இன்னும் இலவச முகக்கவசம் வரவில்லை - வருவதும் பேப்பர் அளவில் தரமற்று மெலிதாகவே உள்ளதாகச் செய்தி வருகிறது.

எதைத் தொடங்கினாலும் ஊழல் முட்டுச்சந்தில் கொண்டு போய் நிறுத்தும் அடிமைகளின் கொள்ளைவெறி உயிர்காக்கும் மாஸ்கிலும் தொடருவது பெரும் துரோகம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “அறிவிக்கப்படாத முதல்வர் மு.க.ஸ்டாலின்: தலைவர் சொல்கிறார்.. ஈபிஎஸ் செய்கிறார்” - உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!