Politics

“இது சித்தாந்த சண்டை போடும் நேரமா?” - பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கொந்தளித்த மம்தா பானர்ஜி!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையாக போராடி வரும் தருணத்தில் மத்திய பா.ஜ.க அரசு அரசியல் செய்யக்கூடாது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாகச் சாடியுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று காணொளிக்காட்சி மூலம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது :

“கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கை மோசமான தி்ட்டமிடலுடன் செயல்படுத்தப்படுகிறது. மாநிலத்தில் உள்ள சூழலை ஆய்வு செய்து ஊரடங்கு குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்ய வேண்டும்.

ஒருபுறம் ஊரடங்கை தீவிரமாக நடைமுறைப்படுத்துங்கள் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி வருகிறது. மறுபுறம் ரயில் சேவையைத் தொடங்கி, மாநில எல்லைகளைத் திறக்கிறது. இது முற்றிலும் முரணாக இருக்கிறது.

தொழிலாளர்களுக்கு ஆதரவான பல்வேறு சட்டங்களை, உரிமைகளைப் பறிக்கும் விதமாக அதை ரத்து செய்த உத்தர பிரதேச அரசு பற்றி மத்திய அரசு ஒரு கேள்வி கூட எழுப்பாதது வியப்பாக இருக்கிறது.

மத்திய அரசுடன் இணைந்து கொரோனாவை எதிர்த்துப் போராடுகிறோம். ஆனால், அரசியல் ரீதியாகத் தேவையில்லாமல் மேற்கு வங்கம் குறிவைக்கப்படுகிறது. சித்தாந்த ரீதியில் சண்டை போட இது சரியான நேரம் இல்லை. ஆனால், இந்தப் போர் நாள்தோறும் நடக்கிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் கட்டணத்தை அவர்களே செலுத்துகிறார்கள். மத்திய அரசால் முடியாவிட்டால், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நாங்கள் செலுத்துகிறோம். தொழிலாளர்கள் எந்தவிதமான நோய்தொற்றும் இல்லாமல் சொந்த ஊருக்கு திரும்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read: “ஜூன் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வா? : குழப்பமான அறிவிப்பு ஏன்?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!