Politics

Social Distance-ஐ காற்றில் பறக்கவிட்ட அதிமுக அமைச்சர்கள் - ஊரடங்கும், கட்டுப்பாடும் மக்களுக்கு மட்டுமா?

தமிழகத்தில் கொரோனா தீவிரம் தினந்தோறும் அதிகரித்து வருவதால், மக்களிடையே பதற்றமும், பயமும் உண்டாகியுள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளது, சென்னை வாசிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே கடந்த ஒருமாத காலமாக முடங்கிக் கிடக்கின்றனர். அரசு குறிப்பிட்ட 1 மணி வரையில் சமூக இடைவெளியை கடைபிடித்து அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வந்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், சென்னை,கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளுக்கு மட்டும் இன்று முதல் வருகிற 29ம் தேதி வரை திடீரென முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், நான்கு நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்க நகரின் சந்தைகளில் மக்கள் கூட்டமாக குவிந்தது, கொரோனாவுக்கு எதிரான தனிமனித இடைவெளியை கேள்விக்குறியாக்கியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னறிவிப்பில்லாமல் திடுதிப்பென முழு ஊரடங்கை அறிவித்ததும், மக்கள் செய்வதறியாது தவித்து போயினர். இப்படி இருக்கையில், அரசின் ஊரடங்கு உத்தரவை அதன் அமைச்சரே பின்பற்றாமல் கூட்டத்தை சேர்த்தது தற்போது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மண்டலமென்றால் அது ராயபுரம்தான். இந்நிலையில், அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதிக்குட்பட்ட பனைமரக்குப்பம், கிரேஸ் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். ஊரடங்கு காரணமாக திணறியிருந்த மக்கள் அமைச்சரின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக சாரை சாரையாக சாலைகளில் சென்றது பேரதிர்ச்சியாக அமைந்தது.

ராயபுரம்

இதேப்போன்று மதுரை திருமங்கலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலவச காய்கறிகள் வழங்கப்படுகிறது என ஷேர் ஆட்டோகளில் வந்த அ.தி.மு.க நிர்வாகிகள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் பொருட்களை வழங்கியிருக்கிறார்கள். இதனால் மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும், வருவாய்த் துறை அமைச்சராக உள்ள ஆர்.பி.உதயகுமார் அதிகாரிகளை வரவழைத்து பேசுவது, பத்திரிகையாளர்களை வரவழைத்து தனி மனித இடைவெளியே இல்லாமல் பேட்டி கொடுப்பது என தொடர்ந்து செய்து வருகிறார். இதனால், அரசு அறிவித்துள்ள ஊரடங்கும் கட்டுப்பாடுகளும் மக்களுக்கு மட்டும்தானா, அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லையா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

Also Read: “முன்யோசனையற்ற அறிவிப்பு; விளம்பரத்துக்காக மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்” : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை