தமிழ்நாடு

“முன்யோசனையற்ற அறிவிப்பு; விளம்பரத்துக்காக மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்” : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

எடப்பாடி பழனிசாமி, தற்போது 4 நாள் முழு ஊரடங்கு என அறிவித்தது, அவரது முன்யோசனையற்ற ஆட்சி நிர்வாகத்தையே காட்டியது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டால்லின் குற்றம் சாட்டியுள்ளார்.

“முன்யோசனையற்ற அறிவிப்பு; விளம்பரத்துக்காக மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்” :  மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பேரிடர் காலத்தில் பொதுமக்களின் நலன் காப்பதுதான் முக்கியமே தவிர, அதையே ஒரு வாய்ப்பாகக் கருதி, வெற்று விளம்பர அரசியல் செய்வது, இறுதியில் எந்தப் பயனையும் தராது என்பதை ஆட்சியாளர்கள் நினைவில்கொண்டு, விளம்பர வெளிச்சத்திற்காக ஏங்கி, மக்களின் உயிரோடு விளையாடுவதை அ.தி.மு.க அரசு இப்போதாவது நிறுத்திக் கொண்டு வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊரடங்கு விதிக்கப்பட்டு வீட்டுக்குள் இருப்பதே கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான முதல்கட்ட நடவடிக்கை என்பதால் மத்திய-மாநில அரசுகள் இரண்டு கட்டமாக நடைமுறைப்படுத்தியுள்ள 40 நாள் ஊரடங்கை மதித்து, பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னை-மதுரை-கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 4 நாட்கள் ‘முழுமையான ஊரடங்கு’ என, எவ்வித முன் தயாரிப்புகளுமின்றி, திடீரென யாரும் எதிர்பாராத நிலையில் அரசு அறிவித்தது, பொதுமக்களை பெரும் அச்சத்துக்கும் குழப்பத்திற்கும் பரபரப்பிற்கும் உள்ளாக்கியது.

நான்கு நாட்கள் என்ன செய்வது என்ற பதற்றத்திலும், அவசர ஆத்திரத்திலும், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக நேற்று (ஏப்ரல் 25) அன்று கூட்டம் கூட்டமாக அவர்கள் வெளியே வந்து, அதனால் எங்கும் நெரிசல் ஏற்பட்டு, இத்தனை நாளும் மக்கள் காத்துவந்த சமூக ஒழுங்கு பாதிக்கப்பட்டு, நோய்த்தொற்றுப் பரவல் குறித்த சந்தேகம் அனைத்துத் தரப்பிலும் அதிகரித்துள்ளது என்பது வேதனைக்குரிய செய்தி ஆகும்.

“முன்யோசனையற்ற அறிவிப்பு; விளம்பரத்துக்காக மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்” :  மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

ஏற்கனவே, அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் திறந்திருக்கும் நேரம் குறித்த கட்டுப்பாட்டுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், அதில் ஏப்ரல் 26 முதல் 29 வரையிலான நான்கு நாட்கள் ‘முழு ஊரடங்கு’ என 24ந் தேதி மாலையில் அறிவிக்கப்பட்டதால் , இத்தனை நாட்களாக அரசு இயந்திரம், ‘அரைகுறை ஊரடங்கை,’ ‘கட்டுப் படுத்தப்படாத ஊரடங்கை’ பிற்பற்றியதா என்ற பெரும் சந்தேகத்துடன், இடையில் உள்ள ஒரு நாளான ஏப்ரல் 25 அன்று, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு விரைந்து வெளியே வருவது இயல்பான ஒன்றுதான்.

நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மத்திய-மாநில அரசுகள் எடுத்து அறிவிக்கும் முடிவுகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதே நேரத்தில், இப்படிப்பட்ட நெருக்கடி மிகுந்த கால கட்டங்களில், மக்களின் தேவைகள் - நலன்கள் கருதி, மக்களை முதலில் மனரீதியாகத் தயார் செய்து, அரசுகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். ‘முழு ஊரடங்கு’ நடைமுறைக்கு வருவதால், ஏப்ரல் 25 - ஒரு நாள் மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்கான நேரத்தை மாலை வரை நீட்டிப்பு செய்தால், பொதுமக்கள் கூட்டம் கூடாமல் வாங்கிச் செல்ல வசதியாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

பேரிடர் காலத்திலும்கூட, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதேச்சதிகார பாணியில், எந்த ஆலோசனையையும் பொருட்படுத்தாமல், எல்லாவற்றையும் விளம்பரமாகக் கருதி, தன் பெயரை முன்னிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் மலிவான அரசியல் நோக்கத்துடன் “மூன்று நாட்களில் தமிழகத்தில் கொரோனா ஒழிந்துவிடும்” என்று ஒரு வாரத்திற்கு முன் சொன்ன ‘டாக்டர்’ எடப்பாடி பழனிசாமி, தற்போது 4 நாள் முழு ஊரடங்கு என அறிவித்தது, அவரது முன்யோசனையற்ற ஆட்சி நிர்வாகத்தையே காட்டியது. அதனால், மக்கள் பதற்றமடைந்து, தேவையான பொருள்கள் கிடைக்குமோ தீர்ந்துவிடுமோ என்ற கவலையில், நேற்று காலையிலிலேயே கடைகள் முன்பாகக் குவிந்துவிட்டனர்.

“முன்யோசனையற்ற அறிவிப்பு; விளம்பரத்துக்காக மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்” :  மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

காய்கறி-மளிகைப்பொருட்கள்-பால் விற்பனையகம்-இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவை உள்ள பகுதிகள் அனைத்திலும் பெருங்கூட்டம் கூடி, இந்த ஊரடங்கின் நோக்கத்தையே சிதைத்து சின்னாபின்னமாக்கும் சூழலை உருவாக்கிவிட்டது. நிலைமை கைமீறிப் போனதற்குப் பிறகு, சென்னை மாநகராட்சி ஆணையரிடமிருந்து, மதியம் 3 மணி வரை கடைகளைத் திறந்திருக்கலாம் என அறிக்கை வெளியாகிறது.

அதற்குள் சென்னையில் பெரும்பாலான கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துவிடவே, மக்கள் இங்குமங்குமாக ஓடி அலைந்து , எங்கேயாவது காய்கறி - மளிகைப்பொருட்கள் கிடைக்கிறதா என அல்லலுற வேண்டியதாயிற்று. “ஹாட்ஸ்பாட்” என சொல்லப்படுகிற நோய்த்தொற்று மிகுந்த சென்னையின் பல பகுதிகளிலும் ஒரே மாதிரியான நிலைமைதான்.

மதுரை, கோவை, தமிழகத்தின் பிற நகரங்களிலும் இதே பதற்றம்தான், ஓட்டமும் நடையும் தான், உரசல்தான், மிரட்சிதான்! காட்சி ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் மக்கள் கூட்டம் தொடர்பான படங்களும் செய்திகளும் வெளியான பிறகு, முழு ஊரடங்கு நாட்களிலும் காய்கறிக் கடைகள்-பால் விற்பனையகங்கள் திறந்திருக்கும் என அரசுத் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

“முன்யோசனையற்ற அறிவிப்பு; விளம்பரத்துக்காக மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்” :  மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

4 நாட்கள் முழு ஊரடங்கு என அறிவிப்பதற்கு முன்பே, இது குறித்தெல்லாம் முறையாக ஆலோசித்து முடிவெடுத்து வெளிப்படையாக அறிவித்திருந்தால், மக்களும் ஆசுவாசப் படுத்திக்கொண்டு, பதற்றமின்றி, வழக்கம்போல, சமூக ஒழுங்கைக் கடைப்பிடித்து தங்களுக்குத் தேவையான பொருட்களை எவ்வித நெரிசலுமின்றி, பொறுமையாக வாங்கிச் சென்றிருக்க முடியும்.

பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வகையில், அவசரக்கோலத்தில் அள்ளித் தெளித்தது போன்ற எடப்பாடி பழனிசாமி அரசின் தான்தோன்றித் தனமான நடவடிக்கையால், நோய்த்தொற்று பரவல் குறித்த ஐயப்பாடும் பயமும் மேலும் அதிகரித்துள்ளது. மக்களின் உயிரைப் பற்றியும் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்தும் அக்கறை இல்லாத ஆட்சியாளர்களால், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு அனைவரின் நெஞ்சத்தையும் அதிர வைத்துள்ளது.

கொரோனா தொற்று அறிகுறிகளுடன், மூச்சுத் திணறல் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டிய மருத்துவர்களுக்கு தற்காப்பு உடை (PPE) அரசு தரப்பிலிருந்து தரப்படாததால், உடனடியாக சிகிச்சையைத் தொடங்க முடியாமல், மூத்த மருத்துவர்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்ட முதுநிலை மாணவர்கள் கண்ணெதிரே அந்த இளைஞர், எந்த சிகிச்சையும் கிடைக்கப் பெறாமல் துடிதுடித்து இறந்துபோனார் என்ற செய்தியை தினத்தந்தி குழுமத்தின் ஆங்கில நாளேடான “டி.ட்டி நெக்ஸ்ட்” முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு, அரசாங்கத்தின் அலட்சியத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது.

“முன்யோசனையற்ற அறிவிப்பு; விளம்பரத்துக்காக மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்” :  மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

பேரிடர் காலத்தில், மருத்துவத்துறைக்கான போதிய அடிப்படை வசதிகளின்றி ஓர் உயிரை பலியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அவசர சிகிச்சை மருத்துவப் பிரிவில் பணியாற்றுபவர்களுக்குக் கூட, “Personal Protective Equipment” எனப்படும் தற்காப்பு கவச உடைகளை தமிழக அரசு வழங்கவில்லை என்பதே, அந்த இளைஞருக்கு சிகிச்சை கிடைக்காமல் போனதற்குக் காரணம் ஆகும். தலைநகர் சென்னையின் முதன்மை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களின் நிலையே இத்தனை பரிதாபகரம் எனில், தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் நிலையை கேட்கவே வேண்டாம்; அதை நினைக்கவே நெஞ்சம் நடுக்குறுகிறது.

இருதய சிறப்பு மருத்துவர் ஒருவர் ஏற்கெனவே கொரோனா தொற்றுக்கு ஆளானதற்கும், அரசின் இது போன்ற அலட்சியமும் முறையான வழிகாட்டுதல் இன்மையுமே காரணம் ஆகும். அவசர சிகிச்சை பிரிவுக்குள் நோயாளிகளை நெருங்கவே அஞ்சும் நிலைக்கு டாக்டர்களை தள்ளியது ஏன் என தமிழக அரசு, நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லவேண்டும். இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அர்ப்பணிப்போடு பணியாற்றும் சுகாதார ஊழியர்களை நெஞ்சாரப் பாராட்டுவதோடு, அவர்களைப் பாதுகாக்கும் கடமை தலையாயது என்பதை அரசுக்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.

மருத்துவப் பணியாளர்கள் - காவல்துறையினர்- தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள வீரர்களுக்கான பாதுகாப்புக் கருவிகளை வழங்குவதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வரும் எடப்பாடி பழனிசாமி அரசு, அதன் மூலமாக மக்களின் நலனையும் அலட்சியப்படுத்தி, மூன்றாம் நிலைக்குத் தள்ளி வருகிறது.

“முன்யோசனையற்ற அறிவிப்பு; விளம்பரத்துக்காக மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்” :  மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போதைய நோய்த்தொற்று சூழலில், அந்தந்த மாநில அரசுகளும் ராஜஸ்தானில் உள்ள தங்கள் மாணவர்களை பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதில் அக்கறை காட்டி வருகின்றன. அங்கு தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, இதுவரை தமிழக அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. அ.தி.மு.க. அரசு உடனடியாக அந்த மாணவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான பாதுகாப்புடன் கூடிய பயணத்திற்கு ஏற்பாடு செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பேரிடர் காலத்தில் பொதுமக்களின் நலன் காப்பதுதான் முக்கியமே தவிர, அதையே ஒரு வாய்ப்பாகக் கருதி, வெற்று விளம்பர அரசியல் செய்வது, இறுதியில் எந்தப் பயனையும் தராது என்பதை ஆட்சியாளர்கள் நினைவில்கொண்டு, விளம்பர வெளிச்சத்திற்காக ஏங்கி, மக்களின் உயிரோடு விளையாடுவதை இப்போதாவது நிறுத்திக் கொண்டு , முன்யோசனை நிறைந்த விவேகத்துடன் விரைந்து செயல்படுமாறு அன்புடன் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories