Politics

எழுவர் விடுதலை வழக்கு : தமிழக அரசின் தீர்மானம் வெறும் ‘ஜீரோ’தான் - மத்திய அரசு தடாலடி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, தான் சட்டவிரோத காவலில் இருப்பதாகவும், தன்னை விடுவிக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய விசாரணை அமைப்பு விசாரித்த வழக்கில், மத்திய அரசை கலந்தாலோசித்துதான் மாநில அரசு முடிவெடுக்க முடியும் என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. நாங்கள் ஒப்புக்கொள்ளும்வரை தமிழக அரசின் தீர்மானம் ஜீரோதான் என்றும் கூறப்பட்டது.

இதேபோல, அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் உத்தரவு பிறப்பிக்கும் வரை சட்டவிரோத காவலில் உள்ளதாக கருத முடியாது என்றும் அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர்தான் முடிவெடுக்க முடியும். ஆளுநரின் அதிகாரத்தை கேள்வி எழுப்ப முடியாது என்று தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும், பரிந்துரையுடன் அரசின் கடமை முடிந்துவிட்டதாகவும், கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும், அவர் தன்னிச்சையாக செயல்படமுடியாது என்று நளினி தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசை ஆளுநர் நடத்துகிறாரா அல்லது மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துகிறதா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

Also Read: ஆளுநரை வலியுறுத்தி எழுவர் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் - தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!