Politics

"நீட் தேர்வு திணிப்புக்கு காரணம் அ.தி.மு.க அரசு தான்” - விஜயபாஸ்கருக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி!

நீட் தேர்வுக்கு காங்கிரஸும், தி.மு.கவுமே காரணம் என அ.தி.மு.க அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக சட்டப்பேரவையில் பேசியதற்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மாணவர்கள் மீது மத்திய பா.ஜ.க அரசு நீட் தேர்வை தொடர்ந்து 2016ம் ஆண்டிலிருந்து திணித்து வருகிறது. ஆனால், சட்டப்பேரவையில் இதுகுறித்து நடைபெற்ற விவாதத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க ஆட்சிக்காலத்தில் டிசம்பர் 2010 முதல் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் பேசியிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன்.

நீட் தேர்வைப் பொறுத்தவரை, இந்தியா முழுவதும் 412 மருத்துவக் கல்லூரிகளில் 35 நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதாக கூறி 2009ம் ஆண்டில் சிம்ரன் ஜெயின் மற்றும் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் உச்சநீதிமன்றம் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு பல தேர்வுகள் நடத்துவதற்கு பதிலாக ஒரே தேர்வு நடத்துவதற்கான முயற்சிகளில் இந்திய மருத்துவ கவுன்சில் ஈடுபட வேண்டுமென்று ஆணையிட்டது.

இதையொட்டி டிசம்பர் 2010ல் இந்திய மருத்துவ கவுன்சில் நீட் தேர்வு நடத்துவது குறித்து அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு, அன்றைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்தும், அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் நீட் தேர்வு நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் பிப்ரவரி 2013ல் போடப்பட்டது. இதில், தி.மு.க தலைமையிலான தமிழக அரசும் வழக்கு தொடுத்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு நீட் தேர்வு நடத்துவதற்கு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு எந்த உரிமையும் இல்லை என்று தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்திய மருத்துவ கவுன்சில் அன்றைய சுகாதாரத்துறை அமைச்சக அறிவுரையை மீறி, மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் 11 ஏப்ரல், 2016ல் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, 28 ஏப்ரல் 2016 முதல் நீட் தேர்வு நடத்துவதற்கான வழிவகை ஏற்பட்டது.

இந்தப் பின்னணியில் இருக்கிற உண்மை நிலையை மூடிமறைக்க அ.தி.மு.க ஆட்சியாளர்கள், ஆதாரமற்ற கருத்துகளை சட்டப்பேரவையில் கூறி, தி.மு.க - காங்கிரஸ் மீது பழிசுமத்துவது கடும் கண்டனத்திற்குரியது.

காங்கிரஸ் - தி.மு.க அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2014 வரை நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்படவில்லை. பா.ஜ.க ஆட்சியில் ஆகஸ்ட் 2016ல் நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு நடத்துவது குறித்து சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இன்று தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்று சொன்னால், அதற்கு மத்தியில் ஆட்சி செய்கிற பா.ஜ.க தான் காரணமே தவிர, காங்கிரஸ் கட்சியோ, தி.மு.கவோ காரணமல்ல என்பதைத் தெளிவாக கூற விரும்புகிறேன்.

தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற முடியாததற்கு முக்கிய காரணம், நீட் தேர்வுகள் மத்திய பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடைபெறுவதுதான். தமிழகத்தில் 8 லட்சம் மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் படிக்கிறார்கள். இதனால் தான், 2017ல் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் நீட் தேர்வில் 10 மாணவர்களும், 2018ல் 1,337 மாணவர்களும் வெற்றி பெற்ற அவலம் நிகழ்ந்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதனால் தான் அனிதாவைப் போன்ற தலித் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய சோக நிகழ்வு ஏற்பட்டது. இதற்கு பா.ஜ.க, அ.தி.மு.க அரசுகள் தான் பொறுப்பாகும்.

தமிழக சட்டப் பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற முடியாத கையாலாகாத அரசாக அ.தி.மு.க உள்ளது. சமீபத்தில், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக மாநிலங்களவையில் வாக்களிப்பதற்கு முன்பாக முன்நிபந்தனையுடன் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கலாம்.

ஆனால், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை என பல்வேறு வகையில் சிக்கிக் கொண்டிருக்கிற அ.தி.மு.க அரசால் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க முடியாது என்பதை அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வை அன்றைய முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மத்திய பா.ஜ.க அரசு தமிழகத்தின் மீது திணித்தது. 2016ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் நீட் தேர்வு இல்லை. எனவே, நீட் தேர்வு திணிப்புக்கு மத்திய பா.ஜ.க அரசும், அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிற அ.தி.மு.க அரசும் தான் முக்கிய பொறுப்பாகும்.

ஒருபக்கத்தில் நீட் தேர்வு எதிர்ப்பு வேஷத்திற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதும், மறுபக்கத்தில் நீட் தேர்வு நடத்துவதும் அ.தி.மு.கவின் இரட்டை வேடம் என்பதை இங்கு உறுதியாகக் கூற விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: #LIVE #TNAssembly | மத்திய அரசுக்கு பயந்த அடிமை அரசு இது - துரைமுருகன் சாடல்!