Politics

“விவசாயி என பெருமையாகப் பேசிக்கொண்டு, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கலாமா?”- எடப்பாடிக்கு கி.வீரமணி கேள்வி!

தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை வழங்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சியின் முன்னணியினர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் சார்பில், மாவட்ட வருவாய் அலுவலர் மனுவைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

கஜா புயலால் தஞ்சை மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், பயிர் காப்பீட்டுத் தொகை தொடக்க வேளாண்மை வங்கிகள் மூலமாக வழங்கப்படும் நிலையில், அந்தத் தொகையைப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்காமல், ஏற்கெனவே விவசாயத்துக்காக விவசாயிகள் பெற்ற கடனுக்காக வரவு வைத்துள்ளனர் என்ற செய்தி உண்மையிலேயே அதிர்ச்சிக்குரியது - இன்னும் சொல்லப்போனால், சிறிதும் மனிதாபிமானற்ற செயலாகும் இது.

இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை ஒருபக்கத்தில் எழுந்துள்ள நிலையில், இப்படியொரு செயலை மேற்கொள்ள எப்படித்தான் அரசுக்கு மனம் வந்ததோ தெரியவில்லை.

விவசாய முதலமைச்சர் என்று ஒரு பக்கத்தில் பெருமையாகப் பேசிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் விவசாயிகளின் வயிற்றில் இப்படி அடிக்கலாமா?

இதனை ஒரு கட்சி பிரச்சினையாக, அரசியல் நோக்காகப் பார்க்காமல், அவதிப்படும் விவசாயிகளின் கண்ணீர்ப் பிரச்சினை என்பதை எண்ணி தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.